பைஜூஸ் நிறுவனத்தில் பரபரப்பு…
ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கே ஸ்பான்சர் செய்யும் அளவுக்கு மிகவும் பிரபலமாக திகழ்ந்தது பைஜூஸ் நிறுவனம். அதீத கடன் சுமை, அடுத்தடுத்த வழக்குகள் என பைஜுஸ் சந்திக்காத பிரச்சனையே இல்லை என்று கூட சொல்லலாம். இந்த சிக்கலின் தொடர்ச்சியாக பைஜூஸ் நிறுவன ஆலோசகர்கள் குழுவில் இருந்து ராஜ்நிஷ் குமார் மற்றும் டிவி மோகன்தாஸ்பாய் ஆகியோர் வெளியேற முடிவெடுத்துள்ளனர். இருவரின் பதவிக்காலமும் வரும் 30 ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது. அதன் பிறகு இருவரும் வெளியேறிவிடுவார்கள் என்கிறது பைஜூஸ் வட்டாரங்கள். பைஜுஸ் நிறுவனத்தின் மீது ஏகப்பட்ட வழக்குகள் இந்தியா மற்றும் அமெரிக்காவிலும் இருப்பதால் பாய் மற்றும் ராஜ்நிஷ் ஆகியோர் நிறுவனத்தில் ஜூன் 30-க்கு பிறகு தொடர விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டனர். கடந்த ஓராண்டாக பாய் மற்றும் குமார் இருவரும் பைஜூஸக்கு நிறைய உதவியளித்துள்ளதாகவும், ஆலோசகர் குழுவை மீண்டும் புத்துயிர் பெற வைக்கும் முயற்சியில் பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரன் ஈடுபட்டுள்ளார். 2022-ல் 22 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிறுவனம், பின்னர் 1 பில்லியன் டாலர்களாக சரிந்துவிட்டது. மோசமான கார்பரேட் நிர்வாகத்தை காரணம் காட்டி ஏற்கனவே ஒரு சில முக்கிய நபர்கள் பைஜூஸில் இருந்து வெளியேறிவிட்டனர். பல பணியாளர்களை பணிநீக்கம் செய்த பைஜூஸ்,பல பணியாளர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்து வேறு வேலை தேடிக்கொள்ள அறிவுறுத்தியது. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திலும் பைஜூசுக்கு எதிராக பல வழக்குகள் உள்ளன. பைஜூஸின் பங்குதாரர்கள் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். ஆனால் நீதிமன்ற வழக்குகள் முடிந்த பிறகே இந்த தொகை கைக்கு கிடைக்கும் என்பதால் பைஜுஸ் நிறுவவனம் பயங்கர சிக்கலில் உள்ளது குறிப்பிடத் தக்கது.