விதிகளை மீறாதீர்கள்- ரிசர்வ் வங்கி கண்டிப்பு..
வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு அறிவுறுத்தலை அனுப்பியுள்ளது. அதில் கடன் தரும்போதும்,வட்டி கணக்கிடும்போதும் முறையற்ற செயலில் சிலர் ஈடுபடுவதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. வட்டி வசூலிப்பதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள மத்திய வங்கி, சிலர் அதனை தவறாக பயன்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது எப்போது கடன் தொகை விடுவிக்கப்படுகிறதோ அதற்கு பதிலாக விண்ணப்பித்த நாளில் இருந்து சில நிறுவனங்கள் கடன்கள் மீது வட்டியை வசூலிப்பதாக குறிப்பிட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டில் இருந்து கடன்கள் மீதான வட்டியை எப்படி வசூலிக்க வேண்டும் என்ற விதியை குறிப்பிட்டு, அந்த விதிப்படி நடக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளையும், நிதி நிறுவனங்களையும் அறிவுறுத்தியிருக்கிறது. இந்த அறிவுறுத்தல் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு மட்டுமேதான் என்று கூறியுள்ள ரிசர்வ் வங்கி பேமண்ட் வங்கிகளுக்கு கிடையாது என்று தெரிவித்துள்ளது. சில வங்கிகள் கடன்கள் மீதான வட்டியை திரும்ப செலுத்தும்போது வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக தொகை வாங்கப்படுவதாகவும் குறிப்பாக தவணையில் வாங்கும்போது இயல்பைவிட ஒரு மாத தவணை அதிகமாக சிலவங்கிகள் வாங்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அதிகம் வசூலித்து இருந்தால் அதனை உடனே திரும்பத் தரவேண்டும் என்றும், செக்குக்கு பதிலாக ஆன்லைனில் குறிப்பிட்ட தொகை தரப்படவேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.