பல முறை உச்சம் தொட்ட தங்கம்
உலக அரசியலில் நிச்சயமற்ற தன்மை மற்றும் பலவீனமான அமெரிக்க டாலர் ஆகியவற்றினால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடத்தை நோக்கி குவிந்ததால், செப்டம்பரில் தங்கம் தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி வந்தது. 2025 ஆம் ஆண்டில் அதன் 39வது புதிய உச்சத்தை எட்டியது..
செப்டம்பர் இறுதியில் அவுன்ஸ் ஒன்றுக்கு 3,825 டாலராக முடிவடைந்தது. இது ஆகஸ்ட் மாத அளவை விட 12% அதிகமாகும். 2024 செப்டம்பர் அளவை விட 47% அதிகம் என உலக தங்க கவுன்சில் (WGC) மற்றும் ப்ளூம்பெர்க்கின் தரவுகள் கூறுகின்றன. 1979க்கு பிறகு 2025ல் தான் தங்கத்தின் வருடாந்திர விலை உயர்வு இந்த அளவுக்கு உச்சமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பங்கு சந்தைகளில் பரிவர்த்தனை செய்யப்படும் தங்க வர்த்தக நிதிகளின் (ETF) மாதாந்திர அளவு 17,300 கோடி டாலராக (146 டன்) உயர்ந்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். இது வட அமெரிக்காவில் 1,060 கோடி டாலராகவும், ஐரோப்பாவில் 440 கோடி டாலராகவும், ஆசியாவில் 210 கோடி டாலராகவும் இருந்தது. COMEX சந்தையில், முன் வணிக கொள்முதல் அளவு 900 கோடி டாலராக (+33 டன்) அதிகரித்து, தங்கச் சந்தை உச்சம் பெறும் வேகத்தை அதிகரித்தது.
அரசியல் பதற்றம், அமெரிக்க டாலரின் பலவீனம் மற்றும் முதலீட்டு தேவை ஆகியவற்றின் கலவையே செப்டம்பர் மாத விலை உயர்வுக்கு காரணம் என்று WGC-யின் தங்க வருவாய் மாதிரி (GRAM) கூறுகிறது. இந்த காரணிகள் விற்பனை செய்து லாபம் ஈட்டுதல் மற்றும் மாத இறுதியில் முதலீட்டு தொகுப்பை மாற்றி அமைத்தல் ஆகியவற்றினால் ஏற்பட்ட லேசான சரிவை பெரிய அளவில் ஈடுகட்டின.
முக்கிய நாடுகளின் கரன்சி மதிப்புகளில், தங்கம் விலை உயர்வு இரட்டை இலக்கத்தை எட்டியது. இதில் கனடா டாலர்களில் 13%, இந்திய ரூபாயில் 12.5% மற்றும் துருக்கிய லிராவில் 12.8% ஆகியவை அடங்கும். இந்தியாவின் முக்கிய சந்தையான MCXல், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹1,14,761 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது.
குறுகிய காலத்தில் தங்கம் விலை சற்று குறை வாய்ப்புள்ள போதிலும், நீண்ட கால அளவில் தங்கம் விலை உயர்வதற்கான காரணிகள் வலுவாகவே உள்ளன. ரிசர்வ் வங்கிகள் தங்கக் கொள்முதலை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. ETFகளில் செய்யப்படும் முதலீடுகளின் அளவு உச்சமடைந்து வருகிறது. கடன் பத்திரங்களில் கிடைக்கும் நிஜ லாப விகிதங்கள் குறைந்து வருவதால், தங்கத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது.
