” தங்கம் இனி வாங்கவே முடியாது போல…”
சென்னையில் இன்று 22 கேரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.89,600ஆக வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
2023 அக்டோபரில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.42,280ஆக இருந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கம் விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.2025இல் மட்டும் 60 சதவீதம் உயர்ந்துள்ளது.
உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை, போர் அச்சுறுத்தல்கள், வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள், உலகின் ரிசர்வ் கரன்சியான டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள், ரிசர்வ் வங்கிகளின் தங்கக் கொள் முதல்கள் போன்ற பல்வேறு காரணங்களினால் தங்கம் விலையில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகிறது.
டிரம்ப் முன்னெடுத்துள்ள வர்த்தகப் போர், அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை சமீபத்தில் 0.25% அளவுக்கு குறைத்தது, நிதிப் பற்றாக்குறையினால் அமெரிக்க அரசு தற்காலிகமாக முடங்கியுள்ளது ஆகிய காரணங்களினால் தற்போது தங்கம் விலை உச்சமடைந்துள்ளது.
உலகின் மிகப் பெரிய நிதிச் சந்தையான அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டால், பிறகு பன்னாட்டு முதலீட்டாளர்கள் அமெரிக்க கடன் பத்திரங்களில் இருந்து தங்கத்திற்கு மாறுவது வழக்கம்.
தங்க நுகர்வில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் தங்கம் உற்பத்தி மிக மிக குறைவு என்பதால், இதில் பெரும் பகுதி இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் 800 டன் அளவுக்கு தங்கம் இறக்குமதி ஆகிறது. எனவே சர்வதே சந்தைகளில் தங்கம் விலை ஏறினால், உடனடியாக இந்தியாவிலும் தங்கம் விலை அதிகரிக்கிறது.
