ஒரு கிராம் தங்கம் ₹15,000 வரை போகுமா?
2026 தீபாவளிக்குள் தங்கம் விலை 10 கிராமுக்கு ₹1.45 லட்சம் முதல் ₹1.50 லட்சம் வரை உயர வாய்ப்புள்ளதாக ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ், அதன் தந்தேராஸ் 2025 தங்க அறிக்கையில் கூறியுள்ளது.
வர்த்தகர்கள் மற்றும் நீண்ட கால முதலீட்டாளர்கள், 10 கிராமுக்கு ₹1.05–₹1.15 லட்சம் என்ற விலையில், தங்கம் விலை சரிவு ஏற்படும் போது தங்கத்தை வாங்குமாறு அறிவுறுத்தியுள்ளது,
அமெரிக்க கடன் பத்திரங்களின் வட்டி குறைப்பு, உலக நாடுகளின் ரிசர்வ் வங்கிகளின் தொடர்ச்சியான தங்கக் கொள்முதல் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் ஆகியவை தங்கத்தின் மீதான ஈர்ப்பை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.
உள்நாட்டு விலைகள் ஏற்கனவே புதிய உச்சங்களை அடைந்து வரும் நிலையில், பங்கு சந்தைகளில் பரிவர்த்தனை ஆகும் தங்க நிதிகளில் (ETF) முதலீடுகள் மற்றும் நிச்சயமற்ற சூழலில் தங்கத்தில் முதலீடு செய்யும் போக்குகள் காரணமாக, இந்த விலையேற்றம் 2026 வரை நீடிக்கும் என்று கணித்துள்ளது.
“விலை உயர்வுக்கான ஒட்டுமொத்த போக்கு நேர்மறையாக இருப்பதால், வர்த்தகர்கள், விலை சரிவுகளில் தங்கம் வாங்கலாம்” என்று இந்த அறிக்கை அறிவுறுத்துகிறது. தற்போதைய நிலைகளிலிருந்து மேலும் 30% வரை உயரும் என்று கணித்துள்ளது.
அடுத்த ஆண்டு தங்கத்தின் விலை உயர்வதற்கு ஐந்து கட்டமைப்பு ரீதியான காரணங்களை ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் குறிப்பிடுகிறது:
1.அமெரிக்காவில் வட்டி விகிதக் குறைப்புக்கள் – கடன் பத்திரங்களின் மகசூல் குறைவதால் தங்கத்தை மேலும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது.
2.ரிசர்வ் வங்கிகளின் தங்கக் கொள்முதல் – அமெரிக்க டாலரிலிருந்து விலகி இதர வகை முதலீடுகளுக்கு மாறும் போக்குகள்
3.புவிசார் அரசியல் பதட்டங்கள் – இறக்குமதி வரி விதிப்புகள், உலகளாவிய போர் சூழல்கள் ஆகியவை பாதுகாப்பான முதலீடுகளுக்கான தேவையை அதிகரிக்கச் செய்கிறது.
4.பலவீனமான டாலர் – டாலரை விட்டு வெளியேறுதல் மற்றும் அமெரிக்காவின் கடன் சுமை உயர்வு ஆகியவை தங்கத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கின்றன.
5.ETF நிதிகளுக்கான டிமாண்ட் உயர்வு – சில்லறை முதலீட்டாளர்கள் பணப்புழக்கம் மற்றும் பணவீக்கப் பாதுகாப்பிற்காக இவற்றில் பெரிய அளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
