கலாநிதி மாறனுக்கு எதிராக தீர்ப்பு??
சன்டிவியின் உரிமையாளரான கலாநிதி மாறனும் ஸ்பைஸ்ஜெட்டும் 2015-ல் செய்துகொண்ட ஒப்பந்தம் தகராறில் முடிந்த நிலையில் அது தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் புதிதாக ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. அதில் கலாநிதி மாறனுக்கு ஆதரவாகவும், ஸ்பைஸ்ஜெட்டுக்கு எதிராகவும் அளிக்கப்பட்ட தீர்ப்பை ஓரமாக எடுத்து வைத்துள்ளது. கடந்தாண்டு ஜூலை 31 ஆம்தேதி டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்தது. அதில் 2018ஆம் ஆண்டு ஆர்பிடிரல் அவார்டாக 579 கோடி ரூபாய் பணத்தை கலாநிதி மாறனுக்கு ஸ்பைஸ்ஜெட் அளிப்பதில் தலையிடவிரும்பவில்லை என்று தெரிவித்திருந்தது. இதையடுத்து மாறனுக்கு ஸ்பைஸ்ஜெட் 270 கோடி ரூபாய் பணமும், 308 கோடி ரூபாய் உத்தரவாதமும் அளித்தது. இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் யஷ்வந்த் வர்மா மற்றும் ரவீந்திர டுடேஜா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில் ஸ்பைஸ் ஜெட் தரப்பினர், கடந்தாண்டு ஜூலை 31 ஆம் தேதி தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து வாதிடப்பட்டது. கடந்தாண்டே நீதிபதி தீர்ப்பில் பணம் தர வேண்டும் என்று கூறியதால் 18 விழுக்காடு வட்டி போட்டு தர நேரிடுவதாக வாதிடப்பட்டது. 2015-ல் கலாநிதிமாறனிடம் இருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பங்குகளை வாங்கியிருந்தது. அப்போது மாறன் தரப்பில் 29 கோடி ரூபாய் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது. அதே நேரம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சன் டிவி ஓனருக்கு 579 கோடி ரூபாய் தர வேண்டியிருந்தது. இந்த பணத்தை தராததால் மாறன் தரப்பு 2017-ல் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் உறுதியளித்தபடி பத்திரத்தையும் அதே நேரம் பணத்தையும் திரும்பத் தரவில்லை என்பதே புகார்., இந்த வழக்கில்தான் மாறன் தரப்புக்கு சாதகமாக அண்மையில் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்பைஸ்ஜெட் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டில்தான் புதிய தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் அளித்திருக்கிறது. டெல்லி உயர்நீதிமன்ற தீ்ர்ப்பால் ஸ்பைஸ்ஜெட் நிறுவன பங்குகள் மதிப்பு 6.5 விழுக்காடு வரை உயர்ந்திருக்கிறது.