இந்தியாவில் அதிகரிக்கும் முதியவர்களின் எண்ணிக்கை
இந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கை மற்றும் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மக்கள் தொகையின் இந்தப் பிரிவுக்குத் தான் அதிக உதவிகளும், கவனமும் தேவைப்படுகிறது, இவர்களுக்கான வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டங்கள் நம்மிடம் இருக்க வேண்டும். ‘இந்தியாவில் முதியவர்கள் – 2021’ என்ற தலைப்பில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கை மேற்கணடவற்றைக் குறிப்பிடுகிறது.
2021ல் இந்தியாவில் ஏறத்தாழ 6.7 கோடி ஆண்கள் மற்றும் 7.1 கோடி பெண்கள் உட்பட கிட்டத்தட்ட 13.8 கோடி முதியவர்கள் வாழ்கிறார்கள் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 2011 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்போடு ஒப்பிடும் போது 2021 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 3.4 கோடி முதியவர்கள் அதிகரித்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2031 க்குள் 5.6 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“மக்கள் தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழல் இருபத்தியோராம் நூற்றாண்டின் மிக முக்கியமான சமூக மாற்றங்களில் ஒன்றாக இது மாற இருக்கிறது, தொழிலாளர் மற்றும் சந்தைகள், பொருளாதாரம் உட்பட சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் இது தாக்கம் விளைவிக்கும், குடும்ப உறவுகள், போக்குவரத்து, சமூகப் பாதுகாப்பு, அத்துடன் குடும்பக் கட்டமைப்புகளில் மாற்றம், தலைமுறைகளுக்கு இடையிலான உறவுகள் மட்டுமில்லாமல் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவைகளிலும் அது பாதிப்பை ஏற்படுத்தும்” என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில், 2011 முதல் 2021 வரை முதியோர் எண்ணிக்கை தோராயமாக 32.7% அளவில் உயர்ந்திருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது, இதே காலகட்டத்தில் பொது மக்கள் தொகை விகிதம் 12.4% அதிகரித்துள்ளது.
முன்பு, வயதான ஆண்கள், வயதான பெண்களை விட அதிகமாக இருந்த நிலைமை மாறி, இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. 2031 ஆம் ஆண்டில், வயதான பெண்களின் எண்ணிக்கை 2011 ஐ விட இரண்டு மடங்காக மாறி இருக்கும். 2021 ஆம் ஆண்டில் கணக்கிடப்பட்ட மக்கள் தொகையின் படி, இந்தியர்களின் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 948 பெண்கள் என்பதாகவும், இது 1951 ஆம் ஆண்டுக் கணக்கோடு ஒப்பிடும் போது கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும், முதியவர்களின் கணக்கில் பாலின விகிதம் 1000 க்கு 1065 பெண்கள் என்ற அளவில் மிக அதிகமாக உள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து கணக்கிட்டால், வயதான ஆண்களின் எண்ணிக்கை 26.5% உயர்ந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில், வயதான பெண்களின் எண்ணிக்கை 39.1% உயர்ந்திருக்கிறது. 2031 ஆம் ஆண்டு வாக்கில், வயதான ஆண்களின் எண்ணிக்கை 39% உயரும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், வயதான பெண்களின் எண்ணிக்கை 41.9% உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“பொருளாதார நல்வாழ்வு, சிறந்த சுகாதாரம், மருத்துவ வசதிகள் மற்றும் கருவுறுதல் விகிதத்தில் ஏற்பட்டிருக்கும் சரிவு ஆகியவற்றால் முதியோரின் எண்ணிக்கை அதிகரிப்பு இனி வரும் காலங்களில் தொடரும்” என்று அறிக்கை கூறுகிறது. எனவே, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் முதியோர்களின் சதவீத பங்கும் அதிகரித்துள்ளது.1961 ஆம் ஆண்டில், மக்கள் தொகையில் 5.6% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தனர். இந்த விகிதம் 2021 இல் 10.1% ஆக அதிகரித்துள்ளது, மேலும் 2031 இல் 13.1% ஆக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
“வயதானவர்களின் அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய சிக்கல்களைக் குறைக்க, அதற்குப் பொருத்தமான சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் அரசால் செயல்படுத்தப்பட வேண்டும்,” என்று அறிக்கை கூறுகிறது. “முதியவர்கள் அதிகரிப்பினால், உண்டாகும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்திய சமூகம் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும், முதியவர்களுக்கான இப்போதிருக்கும் சமூகக் கொள்கைகள் விமர்சன ரீதியாக ஆராயப்பட்டு பொருத்தமான மறுவடிவமைப்பு மேற்கொள்ளப்படுவது அவசியம்,” என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
முதியவர்களுக்கான சமூகக் கொள்கைகளை பரிசீலிக்கும் போது பெண்கள் மிக முக்கியமானவர்கள். வாழ்நாள் முழுவதும் பெண்களுக்கு பல்வேறு சமூக சிக்கல்கள் இருந்தாலும், வயதான காலத்தில் அது அவர்களை அதிக பாதிப்புக்குள்ளாக்குகிறது. அவர்களுக்குத் தேவையான கவனிப்பும், ஆதரவும் கொடுக்கப்படுவது மிக முக்கியம்” என்றும் அறிக்கை கூறுகிறது. 21 முக்கியமான இந்திய மாநிலங்களில், கேரளாவில்தான் அதிகபட்ச முதியோர் விகிதமான 16.5% பதிவாகி இருக்கிறது, அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்கள் உள்ளன. மிகக் குறைந்த பட்ச அளவான 7.7% பீகாரில் கணக்கிடப்பட்டிருக்கிறது, அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் மற்றும் அசாம்.
பொருளாதார நிலை
முதியோர்களின் விகிதம் உயரும் போது, முதியோருக்கான சார்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. முதியோர் சார்பு விகிதம் என்பது 15 முதல் 59 வயதிற்குட்பட்ட 100 நபர்களுக்கு எதிராக 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. அந்த விகிதம் 2011 இல் 14.2% இல் இருந்து 2021 இல் 15.7% ஆக அதிகரித்துள்ளது. இது 2031 ஆம் ஆண்டிற்குள் 20.1% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதியோர் சார்பு விகிதமானது, பொருளாதார சார்பு நிலைக்கான மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. பெண்களைப் பொறுத்தவரை இந்த சார்பு விகிதம் 14.8% ஆக இருக்கும் சூழலில், ஆண்களுக்கு 16.7% ஆக உள்ளது. நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையே முதுமை சார்பு விகிதத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருக்கிறது, ஏனெனில் நகர்ப்புறங்களில் உழைக்கும் வயது மக்கள் தொகை ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது.
கணக்கெடுப்பில் பெண்களின் சார்பு விகிதம் 14.8% ஆக இருக்கும் போது, ஆண்களுக்கு 16.7% ஆக உள்ளது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையே முதுமை சார்பு விகிதத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன, ஏனெனில் நகர்ப்புறங்களில் வயதான உழைக்கும் மக்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது.
இந்தியாவில் முதியோரின் எண்ணிக்கை அதிகரிப்புடன், உழைக்கும் மனிதர்களின் வயதும், எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2021 ஆம் ஆண்டில் 25.5 % ஆக இருந்த 0-14 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் விகிதம் 25.5 %, இது 2011 இல் 30.8% ஆக இருந்தது. 2021 ஆம் ஆண்டில் உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை 64.4% ஐ எட்டும் என்றும், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை கணிப்புகள் குறித்த தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையின் படி 2031 இல் இது 65.2% ஆக மேலும் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
Credits: Bloomberg – Quint