உலகின் 100 பெரும்பணக்காரர்கள் வரிசையில் இணைந்த “டீமார்ட்”டின் ராதாகிஷன் தமானி
“டீமார்ட்” பல்பொருள் விற்பனையகத்தின் முதலீட்டாளரும், முனைவோருமான ராதாகிஷன் தமானி, உலகின் முதல் 100 பில்லியனர்களின் வரிசையில் இணைந்திருக்கிறார். மும்பையில் ஒற்றை அறைக் குடியிருப்பில் வாழ்க்கையைத் துவங்கிய தமானி, இப்போது “ப்ளூம்பெர்க் பில்லியனர்கள்” குறியீட்டில் 98 வது இடத்தைப் பிடித்துள்ளார், அவரது நிகர சொத்து மதிப்பு $19.2 பில்லியன். ப்ளூம்பெர்கின் இந்தக் குறியீட்டெண்னானது உலகப் பணக்காரர்களின் தினசரி தர வரிசையாகும். பட்டியலில் தமானிக்கு முன்பாக இடம்பெற்றுள்ள மற்ற இந்தியர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, அசீம் பிரேம்ஜி, ஹெச்சிஎல் நிறுவனத்தின் ஷிவ் நாடார் மற்றும் லட்சுமி மிட்டல் ஆகியோராவர்.
தமானியின் சொத்து மதிப்பு வளர்ச்சியானது அவரது சில்லறை விற்பனைச் சங்கிலியின் வளர்ச்சியோடு இணைந்ததாக இருக்கிறது. மேலும் இவர், சிறு மற்றும் நடுத்தர சந்தை மூலதனம் கொண்ட பங்குகளில் ஆழ் மதிப்பு முதலீட்டாளராக நீண்ட கால நோக்கில் அதாவது பங்குகளை வைத்துக்கொண்டிருக்கும் காலஇடைவெளி, 10 முதல் 20 ஆண்டு கால முதலீடுகளாக செய்துவருகிறார். “அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்” தவிர, வி.எஸ்.டி இண்டஸ்ட்ரீஸ், இந்தியா சிமெண்ட்ஸ், சுந்தரம் ஃபைனான்ஸ் மற்றும் டிரெண்ட் ஆகியவை அவரது அதிகபட்ச பங்கு உடைமைகளில் அடங்கும்.
மார்ச் 2017-ல் பட்டியிடப்பட்டதிலிருந்து அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் சந்தை மூலதனமதிப்பு ஆறு மடங்குகளாக உயர்ந்துள்ளது, (ரூ.39,813 கோடியிலிருந்து ரூ.2.36 டிரில்லியன்) மேலும் பட்டியலிடப்பட்ட சில்லறை விற்பனையாளர்களின் வரிசையில் தமானி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ.32,870 கோடியிலிருந்து ரூ.1.77 டிரில்லியன் டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்ச பொதுப் பங்கு வைத்திருப்பதில் செபி (SEBI) வகுத்திருக்கும் விதிமுறைகளுக்கு இணங்க தமானி குடும்பத்தினர் தங்கள் பங்குகளை 82.2 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக குறைத்துக் கொண்டிருக்கும் சூழலிலும் இந்த அசாத்திய வளர்ச்சி நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஓராண்டில் மட்டும் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் பங்கு 62 சதவீதம் உயர்ந்துள்ளது.
2002-ல் துவக்கப்பட்ட டீமார்ட், 2009 முதல் 2020 ஆம் நிதியாண்டு வரை விற்பனை மற்றும் லாபத்தைப் பொறுத்தவரை வலுவான இரட்டை இலக்க வளர்ச்சியைக் கண்டது. பெருந்தொற்று காரணமாக 21 நிதியாண்டு வணிகம் பாதிக்கப்பட்டது. நிதியாண்டு 21 ஐ சேர்த்துக் கொண்டாலும் கூட ஆண்டுக் கூட்டு வளர்ச்சி விகிதம் (CAGR)) 56 சதவீதமாக இருக்கிறது, 2008-09 முதல் கணக்கிட்டால் விற்பனை 36 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அவென்யூ சூப்பர்மார்ட்ஸ், பங்குச் சந்தையின் “பிளாக்பஸ்டர்” பட்டியலில் இடம்பெற்றதற்குப் பிறகு தமானி இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களில் ஒருவராக மாறிவிட்டார். அதிகம் பேசப்படாதவராக இருந்த தமானி, சமீபத்தில் மும்பையின் ஆடம்பரமான “மலபார் ஹில்ஸ்” பகுதியில் ரூ.1,000 கோடிக்கு ஒரு குடியிருப்பு சொத்தை வாங்கிய போது தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார், கடந்த சில ஆண்டுகளில் நாட்டின் மிகப்பெரிய சொத்து ஒப்பந்தமாக இது பேசப்பட்டது.
சந்தையின் ஏனைய சில்லறை விற்பனையாளர்களான பியூச்சர் குரூப், ஆதித்யா பிர்லா மற்றும் ஸ்பென்சர் போன்ற நிறுவனங்கள் இழப்புகளை சந்தித்த போதும், தொடர்ந்து தாக்குப்பிடித்து லாபமீட்டிய டீமார்ட்டின் வெற்றிக்கு பல காரணிகள் உண்டு. பிற சில்லறை விற்பனையாளர்களைப் போலல்லாமல், டீமார்ட் அதன் வணிக வளாகங்களை வாடகையில் இல்லாது சொந்தமாக வைத்திருக்கிறது, அதன் சப்ளையர்களுக்கு சரியான சமயத்தில் பணம் செலுத்தப்பட்டு, அதன் மூலம் தள்ளுபடிகளையும் பெறுகிறது. டீமார்ட் சில்லறை வணிகக் கடைகளின் உட்கட்டுமான அமைப்பு எளிமையாக இருப்பதோடு பொதுவாக குடியிருப்புகளின் அருகாமையில் அமைக்கப்பட்டு செயல்படுகிறது. ஜூன் 30, 2021 வரை டீமார்ட்டுக்கு சொந்தமாக 238 கடைகள் இருந்தன. 20-22 ஆம் நிதியாண்டுகளில் மேலும் 59 கடைகளை சேர்க்கப்படும் என்று நிறுவன நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது, டீமார்ட் வெற்றிகரமாக செயல்படும் சில நகரங்களில் “டீமார்ட் ரெடி” எனும் பெயரில் இ-காமர்ஸ் விற்பனை மாதிரியைப் பரிசோதித்துள்ளது.