HDFC – வங்கி ஆன்லைன் சேவைகள் இயங்காது – ஏன்? எப்போது?
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC யின் சில குறிப்பிட்ட ஆன்லைன் சேவைகள் 18 மணி நேரம் இயங்காது என்று அறிவித்திருக்கிறது, இன்று (ஆகஸ்ட் 21) இரவு 9 மணி முதல் நாளை (ஆகஸ்ட் 22) பிற்பகல் 3 மணி வரையில் இந்த ஆன்லைன் சேவைகள் இயங்காது என்று வங்கி அறிவித்திருக்கிறது, தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டிருக்கும் அறிக்கையொன்றில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வங்கித்துறையைப் பொறுத்தவரை பெரும்பாலான வாடிக்கையாளர் சேவைகள் ஆன்லைன் மூலமாகவே நடந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. HDFC புதிய கிரெடிட் கார்டுகளை வழங்க ரிசர்வ் வங்கி விதித்திருந்த தடை நீக்கப்பட்ட சில நாட்களில் இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
ஆனால், “நிர்வாக மேம்பாடுகள் நடக்கவிருப்பதால், வங்கியின் கடன் தொடர்பான சில ஆன்லைன் சேவைகள் மட்டுமே இயங்காது என்றும், மற்ற ஆன்லைன் சேவைகள் வழக்கம் போல தடைகள் ஏதுமின்றித் தொடரும்” என்று வங்கித் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
HDFC வங்கி நாடு முழுவதும், 5550 கிளைகளோடும், 1 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்களோடும் இயங்கும் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாகும், கடந்த இரண்டாண்டுகளாக பல்வேறு சிக்கல்களை இந்த வங்கி எதிர்கொண்டது, “கிரெடிட் கார்டு” சந்தையில் முன்னணி வங்கியாக இருந்த இந்த வங்கி புதிய கிரெடிட் கார்டுகளை விநியோகம் செய்யக்கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி 8 மாதங்களுக்கு முன்பு தடை விதித்திருந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட போட்டியாளர்கள், குறிப்பாக ICICI வங்கி, அமேசான் ஆன்லைன் சேவைகளோடு இணைந்து ஒரு கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தி பெரிய அளவில் வாடிக்கையாளர்களைத் தன் வசம் இழுத்தது.
“கிரெடிட் கார்ட்” சந்தையில் நாங்கள் இழந்த இடத்தை மீட்டு, வெற்றிகரமாக மீண்டு வருவோம்” என்று வங்கியின், தலைமை செயல் அலுவலர் சஷிதர் ஜெகதீசன் குறிப்பிட்டிருக்கிறார், சிட்டி வங்கி தனது இந்திய வங்கித் துறையை மூடிக்கொள்ளப்போவதாக அறிவித்திருந்த நிலையில், சிட்டி வங்கி (இந்தியா) யைக் கைப்பற்ற நடக்கும் போட்டியில், HDFC முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.