“வருமான துறையின் வரி தாக்கல் செய்யும் இணையதளத்தில் குளறுபடிகள்” – இன்போசிஸ் நிறுவனத் தலைமை செயல் அதிகாரிக்கு, நிதி அமைச்சகம் சம்மன் !
வருமான வரித்துறையின் புதிய ஆன்லைன் வரி தாக்கல் செய்யும் இணையதளத்தில் தொடரும் சிக்கல்கள் காரணமாக நிதி அமைச்சகம் இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சலீல் பரேக்குக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வந்த ஜூன் 7 ஆம் தேதி முதலே தொடர்ந்து பல கோளாறுகளுக்கும் இடர்பாட்டிற்கும் உள்ளானது.
சலீல் பரேக், இன்று (திங்கட்கிழமை) காலை நிதி அமைச்சகத்தில் ஆஜராகி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம், “இரண்டரை மாத காலமாகியும், இணையதளத்தில் இருக்கும் குறைபாடுகள் ஏன் களையப்படவில்லை என்பதற்கான விளக்கமளிக்க வேண்டும்” என்று சம்மன் அளிக்கப்பட்டிருப்பதாக ஞாயிற்றுக் கிழமை அன்று வெளியான நிதி அமைச்சகத்தின் ட்வீட் ஒன்றில் தெரியப்படுத்தியுள்ளதுடன், ஆகஸ்ட் 21 க்குப் பிறகு இணையத்தளம் முற்றிலும் அணுக இயலாமல் போனது என்று மேலும் தெரிவித்துள்ளது.
ஜூன் 7 ஆம் தேதி பயன்பாட்டுக்கு வந்த புதிய இ – ஃபைலிங் போர்ட்டலானது, வரித்தாக்கல் செய்யும் செயல்பாட்டுக் காலத்தை 63 நாட்களிலிருந்து ஒரு நாளாகக் குறைப்பதற்காகவும், விரைவாக ரீஃபண்ட்களை வழங்குவதற்காகவும் உருவாக்கப்பட்டது. ஜனவரி 2019 இல், நிதி அமைச்சகத்தின் ஒரு ஏல நடைமுறைக்குப் பிறகு ₹ 4,242 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் இன்போசிஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஒப்பந்தத்தில், 18 மாதங்களுக்குள் போர்ட்டல் செயல்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், மூன்று மாத கால சோதனைப் பயன்பாட்டுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தும், கால தாமதத்திற்குப் பிறகே பயன்பாட்டுக்கு வந்தது. ஜனவரி 2019 ல் இருந்து இந்த ஆண்டு ஜூன் வரை, இன்போசிஸ் நிறுவனத்துக்கு ₹ 164.5 கோடியை போர்ட்டல் வடிவமைப்பிற்காக வழங்கி இருக்கிறது அரசு.
“ஒட்டுமொத்தமாக வருமான வரி மதிப்பீடு செயல்முறை மற்றும் வரி தாக்கல் தடைபட்டிருக்கிறது, வருமான வரி தாக்கல் தொடர்பான வழக்குகளை மீண்டும் திறக்க வேண்டிய காலக்கெடு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு நீட்டிக்கப்பட வேண்டும்.” என்கிறார் ஒரு வருமானவரித்துறை அதிகாரி. தடையற்ற முழுமையான செயல்பாட்டிற்கு இந்த புதிய தளம் வெகு தொலைவில் உள்ளதாக மற்றறொரு அதிகாரி கூறுகிறார். AKM குளோபல் நிறுவனப் பங்குதாரரான அமித் மகேஸ்வரி கூறுகையில், “பழைய போர்ட்டல் நன்றாக இயங்கிய நிலையில், அரசு புதிய போர்ட்டலை வடிவமைக்க இரண்டு ஆண்டு கால அவகாசம் வழங்கி இருந்தது போதுமான காலம்” என்கிறார்.
வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டிருந்தும், பழைய காலக்கெடுவான ஜூலை 31க்கு பிறகு தாக்கல் செய்தவர்களுக்கும் தாமத கட்டணம் செலுத்தக்கோருவது புதிய இணையதள போர்ட்டலில் உள்ள சிக்கல்களில் ஒன்றாக உள்ளது.