ஜீ – சோனி மாபெரும் இணைப்பு! – இந்தியாவில் மிகப்பெரிய பொழுதுபோக்கு நெட்வொர்க்கை உருவாக்குகிறது!
ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL) சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியாவுடன் (SPNI) இணைவதற்கு கொள்கை ரீதியான ஒப்புதலை அளித்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த ஒப்பந்தத்தில், சோனி 52.93% பங்குகளையும், ஜீ 47.07% பங்குகளையும் வைத்திருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா இணைப்புக்குப் பிறகு பெரும்பான்மையான பங்குதாரர்களைக் கொண்டிருக்கும் போது, புதிய நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் பெரும்பாலானவர்கள் சோனி குழுமத்தால் பரிந்துரைக்கப்படுவார்கள், இருப்பினும் இந்தக் கூட்டணி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக புனித் கோயங்கா தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஜீ மற்றும் சோனி தங்களது லீனியர் நெட்வொர்க்குகள், டிஜிட்டல் சொத்துக்கள், தயாரிப்பு மற்றும் நிகழ்ச்சி செயல்பாடுகள் ஆகியவற்றை இணைப்பதற்காக இரு நிறுவனங்களும் பிரத்யேக பிணைப்பு இல்லாத ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன. இதன் மூலம் கேபிள் தொலைக்காட்சி, டிஜிட்டல் வீடியோ ஸ்ட்ரீமிங், இசை மற்றும் வீடியோ தளங்களில் ஒரு ஊடக இணைப்பை உருவாக்க முடியும். இந்தியாவின் பொழுதுபோக்கு துறையில் இந்த இணைப்பு மிகப்பெரிய மாற்றங்களைத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு நிறுவனங்களுக்கிடையே 75 டிவி சேனல்கள், 2 வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் (ZEE5 and Sony LIV), இரண்டு திரைப்பட ஸ்டூடியோ (Zee Studios and Sony Pictures Films India), மற்றும் ஒரு டிஜிட்டல் கண்டென்ட் ஸ்டூடியோ (Studio NXT) இருக்கின்றன. இந்த இணைப்பால், இந்தியாவில் உள்ள சோனி வாடிக்கையாளர்கள் ஜீ-யின் 260,000 மணிநேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பல்வேறு மொழிகளில் உள்ள 4,800-க்கும் மேற்பட்ட திரைப்படங்களையும் அணுகலாம்.
ஜீ 173-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது, உலகம் முழுவதும் 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்களை சென்றடைகிறது மற்றும் ஒவ்வொரு வாரமும் இந்தியாவில் 600 மில்லியனுக்கும் அதிகமான நபர்களை அடைகிறது. அதே நேரத்தில் சோனி இந்தியாவில் 700 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை அணுகி 167 நாடுகளில் செயல்படுகிறது. தற்போது இவ்விரு நிறுவனங்களும் இணைந்துள்ளதால் ஸ்டார் மற்றும் டிஸ்னி இந்தியா கூட்டணி நிறுவனத்தை விட மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது ஜீ – சோனி கூட்டணி.
இந்த இணைப்பு அறிவிப்பின் மூலம் ஜீ என்டர்டெயின்மென்ட் பங்குகளின் விலை ஒரு நாளில் மட்டும் சுமார் 18.76% வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு அதீத லாபத்தைக் கொடுத்துள்ளது. இதேபோல் கடந்த ஒரு மாதத்தில் மும்பை பங்குச்சந்தையில் ஜீ என்டர்டெயின்மென்ட் பங்குகள் சுமார் 78.68% வளர்ச்சி அடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஜீ என்டர்டெயின்மென்ட் பங்குகள் அதிகப்படியாக 318.95 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.