2021 இல் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் யார் ? வெளியான சொத்து மதிப்பு விவரம் !
ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் 2021 இன் படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஹுருன் இந்தியா பட்டியலில் கடந்த 10 ஆண்டுகளாக முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையைச் சேர்ந்த 64 வயதாகும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் 9 சதவீதம் வளர்ச்சி அடைந்து தற்போது ரூ.7,18,000 கோடியாக உள்ளது.
இந்த ஆண்டுக்கான பட்டியலில் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டவர் கௌதம் அதானி. பட்டியலில் இரண்டு இடங்கள் முன்னேறி, அம்பானியைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு தற்போது ரூ.5,05,900 கோடியாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 261 சதவீத வளர்ச்சியாகும்.
தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார் பட்டியலில், தொடர்ந்து மூன்றாம் இடத்தில் நீடிக்கிறார். 67 சதவீத வளர்ச்சி கண்டுள்ள அவரது சொத்து மதிப்பு தற்போது ரூ.2,36,600 கோடியாக உள்ளது. அதானி சகோதரர்கள் இருவரும் முதல் முறையாக முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளனர். மேலும் தொழிலதிபர்கள் இலட்சுமி மித்தல் மற்றும் குமார் மங்கலம் பிர்லா உட்பட ஹுருன் இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்கள் வரிசையில் முதல்முறையாக நான்கு புதிய முகங்கள் இடம்பெற்றுள்ளன.
ஹுருன் இந்தியாவின் 2021 பட்டியலினின் படி இந்தியாவின் 119 நகரங்களில் 1,000 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட சொத்து மதிப்புடைய 1,000 க்கும் மேற்பட்ட தனிநபர்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த செல்வம் 51 சதவிகிதம் உயர்ந்துள்ளது, சராசரி செல்வமும் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று ஹுருன் இந்தியா அறிக்கை தெரிவித்துள்ளது.
ஹுருன் இந்தியாவின் பணக்கார பட்டியல் 2021: இந்த ஆண்டு முதல் 10 பணக்கார இந்தியர்கள்
- முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்): ₹ 7,18,000 கோடி நிகர சொத்து மதிப்பு
- கௌதம் அதானி (அதானி குழு): ₹ 5,05,900 கோடி நிகர சொத்து மதிப்பு
- ஷிவ் நாடார் (HCL): ₹ 2,36,600 கோடி நிகர சொத்து மதிப்பு
- எஸ். பி இந்துஜா (இந்துஜா குழு): ₹ 2,20,000 கோடி நிகர சொத்து மதிப்பு
- இலட்சுமி மித்தல் (ஆர்சலர் மிட்டல்): ₹ 1,74,400 கோடி நிகர சொத்து மதிப்பு
- சைரஸ் எஸ் பூனாவாலா (சீரம் நிறுவனம்): ₹ 1,63,700 கோடி நிகர சொத்து மதிப்பு
- ராதாகிஷன் தமானி (அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்): ₹ 1,54,300 கோடி நிகர சொத்து மதிப்பு
- வினோத் சாந்திலால் அதானி (அதானி குழு): ₹ 1,31,600 கோடி நிகர சொத்து மதிப்பு
- குமார் மங்கலம் பிர்லா (ஆதித்யா பிர்லா): ₹ 1,22,200 கோடி நிகர சொத்து மதிப்பு
- ஜெ சவுத்ரி (Zscaler): ₹ 1,21,600 கோடி நிகர சொத்து மதிப்பு