போட்டி போட்டுக் கொண்டு வீட்டுக்கடன் வட்டி விகிதங்களைக் குறைக்கும் வங்கிகள் !
வீட்டுக் கடன் வணிகத்தை வளர்க்கும் முயற்சியாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) மற்றும் பேங்க் ஆஃப் பரோடா (BoB) வங்கிகள் தங்கள் விகிதங்களை 25-45 பிபிஎஸ் வரை குறைத்துள்ளன. மேலும் சில முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி உள்ளன, 75 லட்சத்துக்கு மேம்பட்ட புதிய வீட்டுக் கடன்களுக்கு எஸ்.பி.ஐ 6.7 சதவிகிதம் வசூலிக்கும், இது முன்பு 71.5 சதவிகிதமாக இருந்தது. நாட்டின் மிகப்பெரிய வீட்டுக்கடன் அளிக்கும் வங்கியான எஸ்.பி.ஐ, க்ரெடிட் புள்ளிகள் இணைக்கப்பட்ட வீட்டுக் கடன்களுக்கு இனிமேல் 6.17 சதவிகிதம் வட்டி வசூலிக்கும். மாதச் சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் மாதச்சம்பளமற்ற கடன் பெறுபவர்களுக்கு இடையிலான வட்டி விகித வேறுபாட்டையும் வங்கி நீக்கி உள்ளது. முன்னதாக சம்பளம் வாங்காத வாடிக்கையாளர்களுக்கான வட்டிவிகிதம் 15 பி.பி.எஸ் புள்ளிகள் அதிகம் கொண்டதாக இருந்தது.
எஸ்.பி.ஐ நிர்வாகிகள் இதுகுறித்துக் கூறும் போது, “மலிவு விலை வீட்டுக் கடன்கள் மற்றும் சிறிய அளவிலான கடன்களில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில் வங்கி பெரிய அளவிலான 75 லட்சத்துக்கும் அதிகமான கடன்களில் தனது வணிகத்தை அதிகரிக்க விரும்புகிறது” என்று தெரிவித்தனர்.
இதற்கிடையில், “வீடு மற்றும் கார் கடன்களுக்கான தற்போதைய விகிதங்களில் 25 அடிப்படை புள்ளிகளை தள்ளுபடி செய்ய முன்வருவதாகவும், வீட்டுக் கடன்களில் ப்ராசஸிங் கட்டணத்தை வங்கி தள்ளுபடி செய்யும்” என்றும் பேங்க் ஆஃப் பரோடா கூறியிருக்கிறது. இப்போது பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் வீடு மற்றும் கார் கடன் வட்டி விகிதங்கள் முறையே 6.75 சதவீதம் மற்றும் 8 சதவீதத்திலிருந்து துவங்குகிறது.
கடந்த வாரம், கோடக் மஹிந்திரா வங்கி அதன் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை 15 பிபிஎஸ் அடிப்படைப் புள்ளிகளில் இருந்து 6.5 சதவீதமாகக் குறைத்தது, இது கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் மிகக் குறைந்த வீட்டுக் கடன் விகிதங்களில் ஒன்றாகும். பண்டிகைக் காலம் துவங்குவதற்கு முன்பாக, தொற்றுநோய்க் காலம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் வீட்டுக் கடன் சந்தை, வங்கிகளிடையே போட்டியை உருவாக்கி இருக்கிறது.
“வங்கிக் கடன் துறையில் இப்போது கொள்கையளவிலான மாற்றங்கள் இல்லை என்றாலும், அதிகப்படியான பணப்புழக்கமானது பொதுவாக வட்டி விகிதங்களைக் குறைக்கிறது” என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். ₹ 5.05 டிரில்லியன் வணிக மதிப்புடன் வீட்டுக் கடன் பிரிவில் “ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா” மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், அதன் வீட்டுக் கடன் மதிப்பானது 22 ஆம் நிதியாண்டின் முதலாவது காலாண்டில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது. எஸ்.பி.ஐ தனது வீட்டுக் கடன் போர்ட்ஃபோலியோ மதிப்பானது 2023-24 நிதியாண்டிற்குள் $ 7 டிரில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.