IMPS வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தியது இந்திய ரிசர்வ் வங்கி!
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உடனடி பணபரிமாற்ற சேவையின் (IMPS) வரம்பை அதிகரிப்பதாக இன்று (08/10/2021) அறிவித்துள்ளது. இனி, வங்கி வாடிக்கையாளர்கள் IMPS மூலம் ரூ. 5 லட்சம் வரை பணப்பரிமாற்றம் செய்துகொள்ளலாம். முன்னதாக IMPS பரிமாற்றத்திற்கான உச்ச வரம்பு ரூ. 2 லட்சமாக இருந்தது.
IMPS பல்வேறு தளங்கள் மூலம் 24 மணி நேரமும் உடனடி உள்நாட்டு நிதிப் பரிமாற்ற வசதியை வழங்குகிறது. IMPS சேவையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும், நுகர்வோர் வசதிக்காகவும், ஒரு பரிவர்த்தனை வரம்பை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுளோம்” என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
IMPS என்பது உடனடி பணப் பரிமாற்ற முறையாகும். ஸ்மார்ட் போன்கள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் இந்த முறையில் தான் நடக்கிறது. IMPS முறையில் வாரத்தின் ஏழு நாட்களிலும் எந்த நேரத்திலும் (24/7) உடனடியாக பணப் பரிவர்த்தனை செய்ய முடிவும். விடுமுறை நாட்களிலும் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும். வங்கிகளின் மொபைல் பேங்கிங் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் மூலம் செய்யப்படும் உடனடியான பணப் பரிமாற்றம் இந்த முறையில் தான் நடைபெறுகிறது.
இந்த வரம்பு அதிகரிப்பு டிஜிட்டல் பரிவர்த்தணையை மேலும் அதிகரிப்பது மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் 2 லட்சத்திற்கு மேல் பணம் செலுத்துவதற்கான கூடுதல் வசதியை வழங்கும். தேவையான அறிவுறுத்தல்கள் தனித்தனியாக வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.