8% க்கும் மேல் வீழ்ச்சியடைந்த சோமாட்டோ-வின் பங்கு – என்ன காரணம்?
சோமாடோ ஐபிஓ-வில் ஆன்கர் முதலீட்டாளர்களுக்கான 30 நாட்கள் வரையறுத்த காலப்பகுதி திங்கட்கிழமை முடிவடைந்த நிலையில் அதன் பங்கு விலை 10% வரை வீழ்ச்சியடைந்தது.
ஆன்க்கர் முதலீட்டாளர் என்பவர் யார்?
அமைப்புசார் முதலீட்டாளர்களுக்கு துவக்கநிலை பொதுவெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாகவே ஒதுக்கீடு அடிப்படையில், குறைந்தபட்ச முதலீடாக ரூ.10 கோடிக்கு செபியால் வரையறுக்கப்பட்ட சட்டதிட்டத்துக்குட்பட்டு பங்குகள் வழங்கப்படுகிறது, அவர்களுக்கு அந்த பங்குகளை மறு விற்பனை செய்வதற்கான கால கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன. பங்கு பொது வெளியில் வர்த்தகத்திற்கு வந்து 30 நாட்கள் கழித்தே அவர்கள் தங்கள் பங்குகளை விற்க முடியும். இந்த வகை திட்டம் 2009-ல் செபியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆன்கர் முதலீட்டாளர்களுக்கான பங்கு விற்பனை கால கட்டுப்பாடு திங்கள் அன்று நிறைவடைந்த நிலையில், அவர்கள் பொது சந்தையில் விற்பதற்க்கு இனி எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. இந்த ஆன்லைன் உணவு விநியோகத்தள இயக்கு நிறுவனத்தின் பங்குகள் 8.8% வீழ்ந்து ரூ.127-ல் பங்கு சந்தையில் வர்த்தகம் முடிந்தது, இது ஒரு மாதத்திற்கு முன்பு பட்டியலிடப்பட்டதிலிருந்து அதன் மிகப்பெரிய ஒற்றை நாள் சரிவாகும். ஆகஸ்ட் 20 வரை, சோமாடோவின் ஆரம்ப பொது வெளியீட்டு விலையான ரூ .76 லிருந்து கிட்டத்தட்ட 83% முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 14 ஆம் தேதி IPO வெளியீட்டுக்கு முன்னதாக ஆன்கர் முதலீட்டாளர்களுக்கு ரூ.76 வீதம் 552.2 மில்லியன் பங்குகளை ஒதுக்கீடு செய்து ரூ. 4197 கோடியை இந்நிறுவனம் திரட்டியது. பங்கு சந்தையில் இந்த பங்கு ஜூலை 23 முதல் வர்த்தகத்திற்கு திறக்கப்பட்டது, இருப்பினும் ஆன்கர் முதலீட்டாளர்கள் மேலே கூறியுள்ளபடி 30 நாட்கள் கழித்தே விற்க முடியும்.
“திங்களன்று விற்பனைக் கட்டுப்பாடுகள் நீங்கிவிட்டபடியால், முதலீட்டாளர்களில் சிலர் தங்கள் பங்குகளை விற்றிருப்பார்கள்” என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். “சில்லறை முதலீட்டாளர்களோ, அதிக நிகர மதிப்புடைய தனிநபர்களோ அல்லது நிறுவனங்களோ, இப்போது விரைவாகப் பணம் சம்பாதிக்கவே விரும்புகிறார்கள்,” என்று தனிப்பட்ட நிதி ஆய்வாளரான அம்பரீஷ் பாலிகா கூறுகிறார். மேலும் அவர் கூறியதாவது “சோமாட்டோவின் ஆன்கர் முதலீட்டாளர்கள் நீண்ட காலத்திற்கு பங்குகளை வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ஒட்டுமொத்த சந்தை நிலைமைகள், பணப்புழக்க பிரச்சினைகள் போன்ற பல்வேறு காரணிகளின் அடைப்படையில் விற்பனை செய்திருக்க வேண்டும்.”
சோமடோவின் ஒரு பங்கு விலை ஆரம்ப பொதுவழங்களின் பொது ரூ.76க்கு கொடுக்கப்பட்டு, சந்தைக்கு வந்த முதல் நாள் 53% ப்ரீமியத்தில் ரூ.116க்கு பட்டியலிடப்பட்டது. பட்டியலிடப்பட்டப் பிறகு, உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனங்கள் 3% பங்குகளையும், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் 7.69% பங்குகளையும் வைத்திருந்தனர்.
பங்குகளைக் கண்காணிக்கும் ஆறு பகுப்பாய்வாளர்களில், நான்கு பேர் “வாங்குவதற்கான” மதிப்பீட்டையும், HSBC மற்றும் டோலத் கேபிட்டல் “விற்பதற்கான” மதிப்பீட்டையும் வழங்கி இருந்தன. ப்ளூம்பெர்க்கின் ஒட்டுமொத்த மதிப்பீடுகளின்படி, பங்கு அதன் தற்போதைய மதிப்பில் இருந்து 24% வருமானத்தை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.