அதானி குழுமத்தின் கைகளில் குவாஹாத்தி விமான நிலையம் !
குவாஹாத்தி, லோக்ப்ரியா கோபிநாத் போர்டோலோய் பன்னாட்டு விமான நிலையத்தின் செயல்பாடுகள், மேலாண்மை மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்காக அதானி குழுமத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது, வடகிழக்கு மாநிலங்களின் முன்னணி பன்னாட்டு விமான நிலையத்தின் செயல்முறையைத் துவங்கி வைத்து அதன் அடையாள சாவியை இந்திய விமான நிலைய ஆணையத்தின் இயக்குனர் ரமேஷ் குமார் அதானி குழுமத்திடம் ஒப்படைத்தார்.
2018 ஆம் ஆண்டில் அகமதாபாத், லக்னோ, மங்களூர், ஜெய்ப்பூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களின் குழுவில் குவாஹாத்தியையும் இந்திய அரசு இணைத்தது. செயல்பாடுகள், மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்காக 50 ஆண்டுகள் தனியார் ஒப்பந்தத்தின் கீழ் கொண்டுவருவதற்கான அரசின் முடிவுக்குப் பிறகு மேற்கண்ட விமான நிலையங்களுக்கான ஏலத்தில் அதானி குழுமம் வெற்றி பெற்றது, இதற்கான ஒப்பந்தம் இந்த ஆண்டு துவக்கத்தில் (ஜனவரி 19) கையெழுத்தானது.
இனி, குவஹாத்தியின் லோக்ப்ரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள், மேலாண்மை மற்றும் வளர்ச்சிப் பொறுப்புகளை புதிய நிர்வாக இயக்குனரான அதானி குவஹாத்தி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (ஏஜிஐஏஎல்) கையாளும் என்று ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதானி குழுமத்தின் பிரதிநிதிகள் முன்னிலையில் ‘தால்-கோல்’ மற்றும் ‘பிஹு’ பாரம்பரிய இசை முழங்க, விமான நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் நிர்வாக மாற்றத்தைக் கையளிக்கும் நிகழ்வைக் கண்டு ரசித்தனர். முதல் மூன்று ஆண்டுகளுக்கு, புதிய விமான நிலைய நிர்வாகம் ஏஏஐ ஊழியர்களால் ஆதரவளிக்கப்படும்.