அமெரிக்காவின் 50 பில்லியன் டாலர் டீல்! – கைப்பற்ற TCS இன் அசத்தல் திட்டம்!
உலகிலேயே மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக உயர்ந்திருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) அமெரிக்க அரசு அறிவித்துள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் (NIH) துறையின் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடி சேவை திட்டத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த ஐடி சேவை ஒப்பந்தத்தைக் கைப்பற்ற கேப்ஜெமினி உட்பட பல ஐடி நிறுவனங்களுடன் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனமும் போட்டிப்போட உள்ளது.
இந்த மாபெரும் திட்டத்தை மொத்தமாக ஒரே நிறுவனத்திற்கு அளிப்பதை விட பல நிறுவனங்களுக்குப் பிரித்துக் கொடுக்க முடிவு செய்துள்ளது டிசிஎஸ். இதன் மூலம் வேகமாகவும் திட்டத்தை முடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை டிசிஎஸ் இன் அமெரிக்க துணை நிறுவனமான டாடா அமெரிக்கா இன்டர்நேஷனல் லிமிடெட் மூலம் சிறு நிறுவனங்களைத் தவிர மற்ற நிறுவனங்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க அரசு அறிவித்துள்ள 75 முதல் 125 ஒப்பந்தங்களை தலைமை தகவல் அதிகாரி – சொல்யூஷன் அண்ட் பார்ட்ன்ஸ் 4 (CIO-SP4) இன் மூலம் பெற டிசிஎஸ் விண்ணப்பித்துள்ளது. CIO-SP4 மூலம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள காரணத்தால், டிசிஎஸ் இத்திட்டத்தைப் பெறுவதன் மூலம், இந்த ஒப்பந்தத்தில் சில பகுதியை வேறு நிறுவனங்களுக்குச் சப் கான்டிராக்ட் முறையில் அளிக்க முடியும்.
CIO-SP4 சமீபத்திய ஆண்டுகளில் தொடங்கப்பட்ட மிகப்பெரிய தொழில்நுட்பக் கொள்முதல் நிறுவனங்களில் ஒன்றாகும். ஐடி சேவைகள், அவுட்சோர்சிங், சைபர் பாதுகாப்பு, கிளவுட் சர்விசஸ் மற்றும் சாப்ட்வேர் டெவலப்மெண்ட் போன்ற சேவைகளை அளிக்கும் அமெரிக்க அரசு நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்பம், பயோமெடிக்கல் மற்றும் சுகாதார தகவல் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை CIO-SP4 நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த 50 பில்லியன் டாலர் திட்டத்தில் சிறு பகுதியை டிசிஎஸ் பெற்றால் கூட அமெரிக்க அரசு சேவையில் இந்திய நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். இதுமட்டும் அல்லாமல் டிசிஎஸ் இத்திட்டத்தைப் பெற்று வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் பட்சத்தில் அமெரிக்க அரசுக்கும் – டிசிஎஸ் நிறுவனத்துக்கும் இடையிலான வர்த்தக உறவு மிகப்பெரிய அளவில் மேம்படும்.