உறுதியான லாபமீட்டும் இண்டெக்ஸ் ஃபண்டுகள் – ஆனந்த் ஸ்ரீனிவாசன், பொருளாதார நிபுணர்
இண்டெக்ஸ் ஃபண்ட் எனப்படும் குறியீட்டு நிதி, ஒரு வகை மியூச்சுவல் ஃபண்ட் அல்லது பரிமாற்ற வர்த்தக நிதி ஆகும், எடுத்துக்காட்டாக ஸ்டாண்டர்ட் & புவர் இன் 500 இன்டெக்ஸ் (S & P 500) போன்ற அமெரிக்க நிதிச் சந்தையின் இண்டெக்ஸ் ஃபண்டை நாம் குறிப்பிடலாம், ஒரு இண்டெக்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் என்பது பரந்த சந்தை வெளிப்பாடுகளையும், குறைந்த இயக்க செலவுகளையும் கொண்டது. இந்த நிதிகள் சந்தைகளின் தற்போதைய மதிப்பைப் பொருட்படுத்தாமல் அவற்றின் பெஞ்ச்மார்க் குறியீட்டைப் பின்பற்றுகின்றன.
உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளர் வாரன் பஃபெட் தனது வாழ்க்கையின் பிந்தைய ஆண்டுகளில் சேமிப்புகளுக்கான சிறந்த தேர்வாக இண்டெக்ஸ் ஃபண்ட்களைப் பரிந்துரைத்துள்ளார். முதலீட்டிற்காக தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை தேர்வு செய்வதற்குப் பதிலாக இந்த வகை இண்டெக்ஸ் ஃபண்ட் முதலீடுகள் சராசரி முதலீட்டாளருக்கு எஸ் & பி 500 (S&P 500) இல் உள்ளடங்கிய நிறுவனங்கள் அனைத்தின் நன்மைகளையும் குறைந்த செலவில் வழங்குகிறது.
அமெரிக்காவின் ஜான் சி போக்லே என்பவரால் 1975 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வகை இண்டெக்ஸ் ஃபண்ட்கள் இரண்டு வகையான செலவினங்களைக் கொண்டிருந்தன, ஒன்று செலவு விகிதம் (Expense Ratio) எனப்படும், அதாவது ஒரு குறிப்பிட்ட இண்டெக்ஸ் ஃபண்டானது, நிர்வாக மற்றும் பிற இயக்கங்களுக்காக எவ்வளவு செலவை எடுத்துக்கொள்கிறது என்பதும், இரண்டாவதாக ஒட்டுமொத்தமாக இண்டெக்ஸ் நிதியை நிர்வகிக்கத் தேவைப்படும் செலவு, இந்த செலவினங்கள், நிதியை நிர்வகிக்கும் நிறுவனங்கள் அல்லது நிதி மேலாளர்களால் கட்டணமாக பிடித்தம் செய்யப்படுகிறது. இது ஏறக்குறைய 2 % என்ற அளவில் இருந்து வந்தது, 2 % செலவினம் என்பது முதலீட்டாளரின் லாபத்தைப் பெருமளவில் பாதிக்கிறது என்பதை உணர்ந்த ஜான் சி போக்லே, இந்த செலவினங்களை 0.5 % அளவிற்கு குறைத்தார், வேன்கார்ட் இண்டெக்ஸ் ஃபண்ட் தான் முதன்முதலில் (Vanguard) வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட இண்டெக்ஸ் ஃபண்டாகும்
இண்டெக்ஸ் நிதியில், அது தேர்வு செய்யப்படும் முறையைப் பின்பற்றி முதலீடு செய்வதே வெற்றிகரமான லாபமீட்டக்கூடிய முறையாக இருக்கும், ஜான் சி போக்லே உருவாக்கிய செலவினக் குறைப்பு கோடிக்கணக்கில் முதலீட்டாளர்களின் செலவுகளைக் குறைத்து லாபத்தைப் பெருக்கியது, அதன் பிறகு உலகளாவிய சந்தையில் இண்டெக்ஸ் நிதியானது மிக வேகமான வளர்ச்சியைக் கண்டது, நடுத்தர, சிறு முதலீடுகளுக்கான இண்டெக்ஸ் ஃபண்டுகள், பத்திரங்களுக்கான, பெருநிறுவனப் பத்திரங்களுக்கான தனித்தனி இண்டெக்ஸ் ஃபண்டுகள் வளர்ச்சி அடையத் துவங்கின. இண்டெக்ஸ் ஃபண்டுகளை வெகு அரிதான நிறுவனப் பங்குகள் தான் வெல்லக்கூடியவையாக இருந்தன, இப்போதும் இருக்கின்றன. ஆண்டுக்கு 4 அல்லது 5 நிறுவனங்கள் மட்டும்தான் இண்டெக்ஸ் ஃபண்டுகளை வெற்றி கொள்ளக்கூடியதாக இருந்தன, மேலும் அப்படி வெற்றி பெரும் நிறுவனங்களும் தொடர்ந்து அதே இடங்களில் நிலைத்திருக்குமா என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை, தொடர்ந்து வெற்றிகரமான நிறுவனங்களின் வரிசை மாறிக் கொண்டே இருந்தது.
ஆனால், இண்டெக்ஸ் ஃபண்டுகளின் வெற்றிகரமான லாபமீட்டும் போக்கு ஒரு நிலையான வளர்ச்சிப் பாதையில் இருந்தது, இருக்கிறது, ஆகவே தான் இந்திய பங்குச் சந்தைகளில் பெஞ்ச்மார்க் வகையாக நிப்டி 50 போன்ற இண்டெக்ஸ் ஃபண்டுகளில் குறைந்த செலவினங்களைக் கொண்ட இண்டெக்ஸ் ஃபண்டை நீங்களே தேர்வு செய்து முதலீடு செய்தால் உறுதியாக லாபமீட்ட முடியும் என்பது தான் பங்குச் சந்தை நிபுணர்கள் தரவுகளோடு சொல்லும் வரலாற்று உண்மை.