டாடா வின் அசத்தல் பிளான்! – ஏர் இந்தியாவுடன் இணையும் டிசிஎஸ்!
இந்திய அரசின் விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா 60,000 கோடி ரூபாய் அளவிலான கடனில் இயங்கி வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு ஏர் இந்தியாவின் ஏலத்தில் டாடா சன்ஸ் குழுமத்திற்கு சுமார் 18,000 கோடி ரூபாய்க்கு விற்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. டாடா சன்ஸ் அறிவித்துள்ள 18,000 கோடியில் 2,700 கோடி ரூபாய் நேரடியாகப் பணமாக அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. மீதமுள்ள 15,300 கோடி ரூபாயைக் கடனாக வங்கிகளில் பெற்று டாடா சன்ஸ் அரசுக்கு அளிக்க உள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை அரசு கட்டுப்பாட்டில் இருந்து டாடா கட்டுப்பாட்டிற்கு விரைவாகக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும், ஏர் இந்தியா சேவையை விரைவாகத் துவங்க வேண்டும் என்பதற்காகவும் தற்காலிகமாக ஒரு புதிய குழுவை உருவாக்கியுள்ளது. இந்த சிறப்புக் குழுவில் டாடா குரூப் அதிகாரிகள், சர்வதேச ஏவியேஷன் வல்லுநர்கள், ஏர் இந்தியாவின் உயர் அதிகாரிகள் ஆகியோர் உள்ளனர்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் புதிய கிளை நிறுவனமான டேலேஸ் பிரைவேட் நிறுவனம் தற்போது ஏர் இந்தியாவை உலகின் முன்னணி விமானச் சேவை நிறுவனங்களுக்கு இணையாக மாற்ற அவற்றின் செயல்பாடுகளை டிஜிட்டல்மயமாக்க முடிவு செய்துள்ளது. இந்த மாபெரும் டிஜிட்டல்மயமாக்கல் திட்டத்தை ஏல முறையில் அளிக்க டேலெஸ் முடிவு செய்துள்ளது.
டாடா குழுமத்தின் முதன்மை தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக டிசிஎஸ் இருக்கும் நிலையில், இந்த ஏலத்தை டிசிஎஸ் நிறுவனம் தான் கைப்பற்றும் என்பது சொல்லப்படாத உண்மையாக இருக்கின்றது. அனைத்து திட்டத்திற்கும் ஒரு வரைமுறை உண்டு என்பதாலும், நிர்வாக முறைகேடுகள், நிதி பரிமாற்றத்தில் தவறுகளைத் தடுப்பதற்காகவும் இந்த ஏல திட்டம் நடத்தப்படுகிறது.
டிசிஎஸ் நிறுவனம் இதற்கு முன்பு விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லையன்ஸ், மலேசியன் ஏர்லையன்ஸ், குவான்டஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ் போன்ற பல முன்னணி நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவை யை சிறப்பாக அளித்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கணபதி சுப்பிரமணியம் இது குறித்துக் கூறுகையில், “விமானப் போக்குவரத்துத் துறையில் அனுபவம் மற்றும் தரமான சேவைக்குப் பெயர் போன டிசிஎஸ் நிறுவனத்திற்கு ஏர் இந்தியாவின் டிஜிட்டல்மயமாக்கல் திட்டம் உண்மையிலேயே ஒரு மகுடம் தான். இந்த ஏர் இந்தியாவில் டிஜிட்டல்மயமாக்கல் திட்டத்தை மெரிட் முறையில் பெற விரும்புகிறோம்” என்று அவர் கூறினார்.