தீவிரமடையும் நிலக்கரித் தட்டுப்பாடு! “பொருளாதார வளர்ச்சியின் அறிகுறி” என்று மின்துறை அமைச்சர் பெருமிதம்!
மத்திய அரசின் தகவல்களின்படி, இந்தியாவில் 4 நாட்களுக்கும் குறைவான நிலக்கரி இருப்பு இருக்கும் அனல் மின் நிலையங்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்திருக்கிறது, இது கடந்த அக்டோபர் 3 இல் 64 ஆக இருந்தது, அனல் மின் நிலையங்களில் நிலவும் நிலக்கரிப் பற்றாக்குறை நெருக்கடி சரி செய்யப்பட நீண்ட காலம் பிடிக்கும் என்று தெரிகிறது, மத்திய மின்சார வாரியத்தால் 165 ஜிகா வாட்ஸ் மின் உற்பத்தி செய்யும் 135 அனல் மின் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இந்த நிலக்கரிப் பற்றாக்குறை அளவு வெளியாகி இருக்கிறது.
அக்டோபர் 3ம் தேதி 135 ஆலைகளில் மொத்த நிலக்கரி இருப்பு 78,09,200 டன்களாக இருந்தது, இது நான்கு நாட்களுக்கு போதுமான இருப்பாகும், 165 ஜிகாவாட் திறன் கொண்ட இந்த 135 மின் உற்பத்தி நிலையங்களின் தினசரி தேவை 18,24,100 டன்கள் ஆகும். ஆனால், நேற்றைய நிலவரப்படி 135 ஆலைகளில் ஒன்று கூட எட்டு நாட்களுக்கு மேலான இருப்பைக் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நான் பிட் பிளான்ட் எனப்படும் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து 1500 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அனல் மின் நிலையங்களில் 7 இல் 5 நாட்களுக்கு மேலான நிலக்கரி இருப்பு இல்லை.
முன்னதாக, மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்டிருக்கும் இந்த நிலக்கரிப் பற்றாக்குறை நெருக்கடி குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மற்றும் நிலக்கரி அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மூன்று அமைச்சர்களும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி கிடைப்பது மற்றும் தற்போதைய மின் தேவைகள் குறித்து விவாதித்ததாக நம்பப்படுகிறது.
“நிலக்கரித் தேவை அதிகரித்து வருவது பொருளாதாரம் வளர்ந்து வருவதைக் காட்டுகிறது, இன்றைய தரவுகளைப் நாம் பார்த்தால், நம்மிடம் 4 நாட்களுக்கு நிலக்கரி இருப்பு உள்ளது. நிலக்கரி ரேக்குகள் தினமும் வருகின்றன. மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரி அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளைக் கொண்ட மின் செயலாளர் தலைமையில் ஒரு குழு நம்மிடம் உள்ளது, அவர்கள் தினமும் நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர், மேலும் தேவை மற்றும் விநியோக நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர், நிலக்கரித் தேவைகளை நம்மால் சமாளிக்க முடியும்” என்று யூ.என்.ஐ க்கு அளித்த பேட்டியில் மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.