ஆகாஷ ஏர் – இந்தியாவின் புதிய லோ-பட்ஜெட் விமானம்!
இந்தியாவின் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளர்களில் ஒருவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வின் ஆதரவுடன் இயங்கி வரும் SNV ஏவியேஷன் நிறுவனம் ஆகாஷ ஏர் என்ற பெயரின் கீழ் ஒரு விமான நிறுவனத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு விமான போக்குவரத்து அமைச்சகம் முதற்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது. ஆகாஷ ஏர் குறைந்த கட்டணத்தில் அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் செயல்படும் என்றும், இதன் சேவைகள் அடுத்த ஆண்டுக்குள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
ஜுன்ஜுன்வாலா இந்நுவனத்தில் 40 சதவீத பங்குகளை வைத்திருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுன்ஜுன்வாலா 35 மில்லியன் டாலர் முதலீட்டில் அடுத்த நான்கு ஆண்டுகளில் ஆகாஷ ஏர்-ஐ 70 விமானங்கள் கொண்ட நிறுவனமாக மாற்றத் திட்டமிட்டுள்ளார்.
ஆகாஷ ஏர் நிறுவனம் ULCC வகை விமானங்களைக் கொண்டு செயல்பட உள்ளது. இந்த வகை விமானங்கள் இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற வழக்கமான பட்ஜெட் விமான நிறுவனங்களை விட இயக்க செலவை இன்னும் குறைவாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துகிறது. இருக்கை தேர்வு, உணவு மற்றும் பானங்கள் போன்ற முழு சேவை விமான அனுபவத்துடன் தொடர்புடைய சில வசதிகளைத் தவிர்ப்பதன் மூலம் மேலும் குறைத்த கட்டணத்தில் செயல்பட முடியும்.
இந்த விமான நிறுவனத்தின் செயல்பாடுகளைத் திட்டமிட முன்னாள் ஜெட் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி வினய் துபே மற்றும் முன்னாள் இண்டிகோ தலைவர் ஆதித்யா கோஷ் போன்ற விமானத் துறை நிபுணர்களை நியமித்துள்ளார் ஜுன்ஜுன்வாலா. வினய் துபே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பார் என்றும், ஆதித்யா கோஷ் ஜுன்ஜுன்வாலா வின் நியமன அதிகாரியாக குழுவில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறையை வேகமாக வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல மத்திய அரசு இத்துறையில் பல மாற்றங்களை அறிவித்து வருகிறது. இதேவேளையில் இந்தியாவில் 2ஆம் தர நகரங்களில் இருக்கும் விமான நிலையைத்தை விரிவாக்கம் செய்யவும், சர்வதேச விமான நிலையமாக மாற்றும் திட்டத்தையும் கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் அடுத்த 5 முதல் 10 வருடத்தில் அமெரிக்கா, ஐரோப்பா, சீனாவில் இருப்பது போல் இந்தியாவிலும் உள்நாட்டு விமானச் சேவைகள் மிகப்பெரிய அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.