பங்குச் சந்தை தரகர்களை தேர்வு செய்ய உதவும் 5 எளிய வழிகள் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் – பொருளாதார நிபுணர்
பொதுவாக, தரகர் என்கிற சொல்லாடல் பிறர் சார்பாக பொருட்களை வாங்கி விற்கும் ஒருவரைக் குறிக்கிறது. அவர்கள் இரண்டு வணிகப் புள்ளிகளுக்கு இடையில் செயல்படும் இடைத்தரகர்கள். பங்குச் சந்தை என்று வரும்போது, தரகர் என்ற சொல்லாடல் ஒரு தனிநபரையோ அல்லது ஒரு நிறுவனத்தையோ குறிக்கும், முதலீட்டாளரிடம் கட்டணம் அல்லது கமிஷன் பெற்றுக்கொண்டு பங்குகளை வாங்கவும், விற்பதற்குமான ஆர்டர்களை செயல்படுத்துகிறார். இது தவிர, சில தரகர்கள் பங்குகள் குறித்த ஆய்வுகள், முதலீட்டுத் திட்டங்கள், மார்ஜின் நிதி மற்றும் பிற மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளையும் வழங்குகிறார்கள்.
இப்போது பெரும்பாலான தரகர்கள் போர்ட்ஃபோலியோ மேலாண்மை உட்பட முழுமையான நிதி சேவைகளை வழங்குகிறார்கள், தரகு நிறுவனங்கள் முதலீட்டாளரின் சார்பாக பணத்தை நிர்வகிக்கின்றன, முதலீட்டாளர்கள் பங்கு வர்த்தகம் மேற்கொள்ளத் தேவையான வர்த்தகக் கணக்குடன் ஒரு “டீமேட்” கணக்கைத் திறந்து கொடுப்பது தான் ஒரு தரகரின் முதன்மையான வேலையாகும்.
ஒரு சரியான தரகரைத் தேர்வு செய்வது அத்தனை எளிதானது அல்ல. நீங்கள் விரும்பும் வசதிகளை, வாய்ப்புகளை ஒரு பட்டியலாகத் தயார் செய்து கொள்ளுங்கள், அவற்றைப் தரகர்கள் கொடுக்கும் சேவைகளோடு பொருத்திப் பார்ப்பதே ஒரு தரகரைத் தேர்வு செய்வதில் சிறந்த அணுகுமுறையாக இருக்கும். தரகரைத் தேர்வு செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய சில எளிய விதிகள் கீழே உள்ளன:
1) பொருட்காட்சிகளிலோ, மல்டிப்ளெக்ஸ் எனப்படும் ஒருங்கிணைந்த மையங்களிலோ, வணிக வளாகங்களில் செயல்படும் கடைகளில் இருந்தோ கணக்குகள் அல்லது நிதி சேவைகளை வழங்கும் ஒரு தரகரிடம் கணக்கைத் திறக்க வேண்டாம், இதுபோன்ற இடங்களில் அனுபவமே இல்லாத நபர்களுக்கு அனுபவம் பெறுவதற்காக வாய்ப்புகள் வழங்கப்படுகிறது, இந்தியாவில் நிதி ஆலோசகராக இருக்க இப்போது எந்த சான்றிதழும் தேவையில்லை.
2) ஒரு தரகர் செய்யும் எந்த ஒரு பரிந்துரையும் அவருக்கு மிக உயர்ந்த தரகுத் தொகையை அளிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே உங்கள் போர்ட்ஃபோலியோவை மாற்றுவதற்கு தரகர் உங்களை ஊக்குவிப்பார், தனது நிறுவனத்திற்கு மிக உயர்ந்த நிர்வாகக் கட்டணத்தை ஈட்டும் பொருட்டு போர்ட்ஃபோலியோ மேலாண்மைத் திட்டங்களில் முதலீடு செய்ய அவர் உங்களுக்குப் பரிந்துரை செய்வார், முதலீடு தொடர்பான விஷயங்களை பொறுத்தவரை எப்போதும் “வாங்குபவர்கள் ஜாக்கிரதை” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
3) தரகு நிறுவனங்கள் வசூலிக்கும் கமிஷன்கள் மற்றும் பிற கட்டணங்களைக் கவனியுங்கள்.அவர்களால் வழங்கப்படும் வசதிகளைப் புரிந்து கொள்ளுங்கள். எல்லா தரகு நிறுவனங்களும் குறைந்தபட்சம் இரண்டு திட்டங்களைக் கொண்டுள்ளன. ஒன்று பொதுவாக குறுகிய கால உள்-நாள் வர்த்தகம் (Intra Day Trading) மற்றொன்று நீண்ட கால முதலீட்டுத் திட்டங்கள். நீங்கள் விரும்பும் பாதுகாப்பான திட்டங்களை அவர்களால் கொடுக்க முடிகிறதா என்று பாருங்கள்.
4) பெரும்பாலான முழு சேவை தரகு நிறுவனங்கள் பங்குகள், நிறுவனங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்த பல்வேறு சேவைகளை வழங்குகின்றன. இந்த சேவைகள் உங்களுக்குத் தேவையா என்பதையும், உங்கள் தரகரால் இந்த சேவைகளை உங்களுக்கு வழங்க முடிகிறதா என்பதையும் பாருங்கள், ஏனெனில் பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகளை வாங்குவது மற்றும் விற்பது குறித்து சிறந்த முடிவுகளை எடுக்க இவை உங்களுக்கு உதவலாம்.
5) பெரும்பாலான முதலீட்டாளர்கள் தரகு நிறுவன நிர்வாகியிடம் பேசவோ அவர்களின் அலுவலகத்திற்கு செல்லவோ விரும்புகிறார்கள். அது மிக முக்கியமானதாகும், ஏனெனில் ஆன்லைன் தரகு நிறுவனங்கள் எங்கே இருந்து செயல்படுகின்றன, யார் நிர்வகிக்கிறார்கள், எப்போது காணாமல் போகும் என்பது குறித்து எந்த உறுதியும் இல்லை. ஆகாவே தரகு நிறுவனத்தின் உள்ளூர் அலுவலகம் உள்ளதா என்று சரிபார்க்கவும். நேரில் அல்லது அலைபேசி மூலம் சில பரிவர்த்தனைகளை அவசரமாக செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், தேர்வு செய்யும் தரகர் அல்லது தரகு நிறுவனம் அதற்கு ஆயத்தமாக இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள்.
இறுதியாக, ஒரு அறிவார்ந்த முதலீட்டாளருக்கு தரகர் என்பவர் பங்குகளை, தமது உத்தரவுகளின்படி பங்கு சந்தையில் வாங்குவதற்கும், விற்பதற்கும் சந்தை நெறியாளரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பொதுவான இடை மனிதர் மட்டுமே, இந்த சேவைக்காக அவருக்கு தரகுப் பணம் வழங்கப்படுகிறது. உறுதியாக அவர் முதலீட்டு குருவாக செயல்பட்டு முதலீட்டாளருக்கு பணம் சம்பாதித்துத் தருபவர் அல்ல. உங்கள் உழைப்பின் மூலம் நீங்கள் ஈட்டிய பணத்தை நம்பகமற்ற தரகர்களிடம் இழந்து விடாமல், எச்சரிக்கையோடு லாபமீட்டுங்கள்.
ஒரு “டீமேட்” கணக்கை நீங்கள் துவக்க வேண்டுமா? இது குறித்த மேலதிக விவரங்கள் தேவைப்படுகிறதா? திரு.ஜானகிராமன் அவர்களை 7305088517 என்ற அலைபேசி எண்ணில் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.