7500 கோடி டீல்! – டெஸ்லாவுடன் நேரடியாக மோதும் டாடா!
இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் எலக்ட்ரிக் வாகன கம்பெனி (TML EVCo)-யில் அமெரிக்கப் பங்கு முதலீட்டு நிறுவனமான TPG மற்றும் அபுதாபியின் ADQ நிறுவனம் சுமார் 1 பில்லியன் டாலர், அதாவது 7,500 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. TPG மற்றும் ADQ நிறுவனங்கள் அடுத்த 18 மாதத்தில் இந்த 7,500 கோடி ரூபாய் தொகையை முதலீடு செய்ய உள்ளது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகன (EV) வணிகமே இந்நிறுவனங்களை TML EVCo வில் முதலீடு செய்ய ஈர்த்துள்ளது.
இந்தியாவில் 10,000 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த முதல் ஆட்டோமொபைல் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் திகழ்கிறது. எனவே, தனது உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக இது போன்று முதலீட்டைத் திரட்ட துவங்கியுள்ளது. தற்போது TPG மற்றும் ADQ நிறுவனங்கள் முதலீட்டின் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மதிப்பு மொத்தமாகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா அமெரிக்கா, சீனா, கனடா, ஜெர்மனி, பிரிட்டன் என உலகின் பல முன்னணி நாடுகளில் தனது டெஸ்லா கார்களை விற்பனை செய்து வரும் நிலையில், இந்தியாவிலும் தனது எலக்ட்ரிக் கார் விற்பனையைத் துவங்க தீவிரம் காட்டி வருகின்றது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் கார்களுக்கு வரி சலுகையைப் பெற வேண்டும் என்பதற்காக இந்தியாவில் பெரும் தொகையை முதலீடு செய்யவும், கூட்டணி முறையில் டெஸ்லா கார்களுக்குத் தேவையான உதிரிப்பாகங்களை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
மின்சார கார்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகை திட்டங்கள் போதிய திருப்தி தராததும், போதிய சார்ஜிங் கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினாலும் தனது திட்டத்தைத் தள்ளிப் போட்டது டெஸ்லா. இதற்கான பேச்சுவார்த்தையை டெஸ்லா நிறுவனம் மத்திய அரசிடம் செய்து வருகின்றது. இந்நிலையில், TPG மற்றும் ADQ நிறுவனங்களின் செய்துள்ள முதலீட்டின் மூலம் டெஸ்லாவுக்கு நேரடி போட்டியாக டாடா உருவெடுத்துள்ளது.
சமீபத்தில் மத்திய அரசும் இந்தியாவில் மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளது. பிளெக்ஸ் இன்ஜின், ஹைட்ரஜன் செல், சிஎன்ஜி, எலக்ட்ரிக் கார் உற்பத்திக்கு அதிகளவில் ஆதரவு அளிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்திய ஆட்டோமொபைல் துறை பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் இருந்து எலக்ட்ரிக் வாகனங்களுக்கு உடனடியாக மாறுவது கடினம் என்றாலும் காலப்போக்கில் இந்த மாற்றம் ஏற்படும் என்று உறுதியாகக் கூறப்படுகிறது.