வேலையின்மை, இந்தியாவின் தொடரும் துயரம் !
வட இந்தியாவின் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெருகி வரும் வேலையின்மை இந்தியாவின் பொருளாதார மீட்சிக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கிறது, இவற்றில், 8 மாநிலங்களில் வேலையின்மை இரட்டை இலக்க விகிதத்தை எட்டியிருக்கிறது, கோவிட் பெருந்தொற்றால் முடங்கிப் போன பொருளாதார வளர்ச்சியின் சுமையை இது மேலும் அதிகரிப்பதாக இருக்கிறது.
வேலையின்மை இரட்டை இலக்கத்தை எட்டியிருக்கும் மாநிலங்களின் வரிசையில் மிக உயர்ந்த பட்சமாக ஜம்மு-காஷ்மீரில் 21.6 %, இரண்டாமிடத்தில் ஹரியானா 20.3 %, மூன்றாமிடத்தில் ராஜஸ்தான் 17.9 %, டெல்லி 16.8 %, இமாச்சலப் பிரதேசத்தில் 9.3% ஆகவும், பீகார், திரிபுரா, ஜார்க்கண்ட் மற்றும் புதுச்சேரி 10 % முதல் 15.3 % வரை உள்ளது. தென் மாநிலங்களைப் பொறுத்தவரை புதுச்சேரி வேலையின்மையில் 3 % அதிகரிப்பையும், தமிழகத்தில் வேலையின்மை விகிதம் 7 % ஆகவும் உயர்வடைந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா வேலையின்மையைப் பொறுத்தவரை மிகப்பெரிய சவால்களை சந்தித்து வருகிறது, இது பெருந்தொற்றுக் காலத்தில் மிக மோசமடைந்தது. கடந்த ஆண்டு தேசிய அளவில் முழு அடைப்பு கடைப்பிடிக்கப்பட்ட பின்னர், இந்தியாவின் வேலையின்மை விகிதம் 20 % ஐத் தாண்டியது. இது இப்போது 7% ஆகக் குறைந்திருந்தாலும், இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய தொழிலாளர் சந்தையில் 7% தேசிய வேலையின்மை விகிதம் என்பது (நகர்ப்புற வேலையின்மை 8.62%) மிக அதிகமானதாகவும் கவலைக்குரியதாகவும் கருதப்படுகிறது.
கார் உற்பத்தி, முற்றிலும் சிதைந்து போன சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகள் போன்ற சில மிக முக்கியமான உற்பத்தித் துறைகளில் குறைந்த அளவு மீட்சியும், குறைந்த அளவிலான விவசாயப் பொருட்கள் உற்பத்தி போன்றவை இந்தியாவின் இரட்டை இலக்க வேலையின்மைக்குக் காரணிகளாக இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
தகவல் தொழில்நுட்பம், நிதி சேவைகள் மற்றும் உணவு தயாரிப்பு போன்ற துறைகள் கணிசமான வேலைகளை சேர்த்திருந்தாலும், மிக முக்கியமான ஜவுளித்துறையானது செப்டம்பர் மாதம் சுமார் 10 லட்சம் வேலைகளை இழந்தது, சிமெண்ட், ஓடுகள், கண்ணாடி மற்றும் செங்கற்கள் போன்ற துறைகளில் கூட்டாக 15 லட்சம் பணியாளர்கள் வேலையிழந்தார்கள். இதேபோல், மோட்டார் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து துறை கூட்டாக செப்டம்பரில் 3.5 லட்சம் வேலைகளை இழந்தது.