பிரதமர் மோடியை சந்திக்கிறார் எலான் மஸ்க் !
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை விரைவில் சந்திக்க இருக்கிறார் என்றும், இந்த சந்திப்பின்போது டெஸ்லா கார் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் மின்சார கார்களை தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனமான டெஸ்லா தனது கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது, ஆனால், இந்தியாவில் மின்சாரக் கார்களின் இறக்குமதி வரி மிக அதிகமாக உள்ளது, இது அந்த நிறுவனத்துக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது, இதனால் இறக்குமதி வரியை குறைக்கக்கோரி டெஸ்லா நிறுவனம் பிரதமர் அலுவலகத்தை அணுகி உள்ளதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கார் தொழிற்சாலை ஒன்றை அமைக்குமாறு இந்திய அதிகாரிகள் தரப்பு டெஸ்லாவைக் கேட்டுக் கொண்டது. ஆனால் புதிதாக சில நாடுகளில் தொழிற்சாலைகளை அமைந்துள்ளதால் இப்போதைக்கு இந்தியாவில் தொழிற்சாலை ஒன்றை அமைக்க வாய்ப்பு இல்லை என்றும், தேவைப்பட்டால் இந்தியாவில் தங்களுக்கு வேண்டிய பொருட்களை உற்பத்தி செய்து அதை வெளிநாடுகளில் உள்ள தனது உற்பத்தி மையத்திற்கு இறக்குமதி செய்து கொள்வதாகவும் டெஸ்லா கூறியது. இதனால் இருதரப்புக்குமான பேச்சுவார்த்தை இழுபறியாகவே இருக்கிறது. இதனிடையே டெஸ்லா கார் இந்திய சந்தைக்கு வந்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று உள்ளூர் கார் தயாரிப்பு நிறுவனங்கள் கவலை தெரிவித்து உள்ளன. இந்த அச்சத்தை போக்குவதற்காகவும், இந்தியாவில் தங்களது கார்களின் இறக்குமதி வரியை குறைப்பதற்காகவும் பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் எலான் மஸ்க்.