மூலப்பொருட்களின் விலை உயர்வு எதிரொலி ! இரட்டிப்பாகும் தீப்பெட்டி விலை !
மூலப்பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக தீப்பெட்டியின் விலையை டிசம்பர் 1ம் தேதி முதல் உயர்த்த தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது, சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி போன்ற இடங்களில் தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள், நாடு முழுவதும் வினியோகம் செய்யப்பட்டு விற்பனை ஆகிறது. இத்தொழிலில் சுமார் 1500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன, சுமார் 4 லட்சம் பேர் பணிபுரிந்து வரும் தீப்பெட்டி தயாரிப்பில் பெரும்பான்மையானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்ந்து வரும் பணவீக்கம் காரணமாக மூலப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, உதாரணமாக, தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் ரெட் பாஸ்பரஸின் விலை ₹ 425 ரூபாயிலிருந்து ₹ 810 ரூபாயாகவும் மெழுகு ₹ 50 ரூபாயில் இருந்து ₹ 80 ரூபாயாகவும் உயர்ந்துள்ளன. பிற பொருட்களின் விலையும் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது, இதன் காரணமாக ஒரு தீப்பெட்டியின் விலை ₹ 1 இலிருந்து ₹ 2 க்கு விலை உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு டிசம்பர் 1-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.