“ஓயோ” வின் ஐபிஓ வைத் தடை செய்யுமா செபி?
ஹோட்டல்களுக்கான நெறிமுறைகளை வகுக்கும், இந்திய விருந்தோம்பல் துறையின் தலைமை அமைப்பான எஃப்.எச்.ஆர்.ஏ.ஐ (FHRAI) தவறான தகவல்களை முன்வைத்ததற்காக ஓயோவின் (OYO) முன் மொழியப்பட்ட ஐபிஓவை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியைக் (SEBI) கேட்டுக் கொண்டுள்ளது.
செபிக்கு, எஃப்.எச்.ஆர்.ஏ.ஐ (FHRAI) அனுப்பியுள்ள எட்டு பக்க அறிக்கையில், ஓயோ (OYO) ஹோட்டல் யூனிகார்னின் தாய் நிறுவனமான ஓரவெல் ஸ்டேஸ் ($1 பில்லியனுக்கு அதிகமாக மதிப்பிடப்பட்டது), போட்டி-எதிர்ப்பு வணிக நடைமுறைகள் மீறல், நீதிமன்ற வழக்குகளின் விவரங்களை வெளியிடாமல் இருத்தல் மற்றும் வரைவு பிராஸ்பெக்டஸில் காட்டப்பட்ட மதிப்புடன் சாத்தியமில்லாத வணிக மதிப்பீடுகள் ஆகியவற்றை முன்வைத்து குற்றம் சாட்டியிருப்பதுடன் ஐபிஓ வை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
ஓயோ, ஐபிஓ மூலம் $ 1.2 பில்லியன் (இந்திய ரூபாய் மதிப்பில் 8,880 கோடி) திரட்டப் பார்க்கிறது. ஓயோவின் வரைவு பிராஸ்பெக்டஸ், மிக முக்கியமான பொருள் விடுபடல்கள் மற்றும் தவறான அறிக்கைகளால் நிரம்பியுள்ளது என்பதால் ஓயோவின் முன்மொழியப்பட்ட ஐபிஓவை இடை நீக்கம் செய்யுமாறு ஜோஸ்டெல் ஹாஸ்பிடாலிட்டி (ஹோட்டல் ரூம்களை நிர்வகிக்கும் ஷோ ரூம் ஆப்பரேட்டர்) செபியை கேட்டுக்கொண்டதற்குப் பிறகு எஃப்.எச்.ஆர்.ஏ.ஐ.யின் அறிக்கை செபியிடம் வந்துள்ளது. இந்தியாவின் போட்டியாளர் ஆணையம் (சிசிஐ) ஓயோவுக்கு எதிராக வழங்கிய தீர்ப்பின் விவரங்களையும் ஓரவெல் வெளியிடத் தவறி இருக்கிறது என்று எஃப்.எச்.ஆர்.ஏ.ஐ அறிக்கையில் தெரிவித்துள்ளது. போட்டியாளர்களுக்கு எதிரான முறையற்ற நடைமுறைகளில் ஓயோ ஈடுபட்டதற்காக தொழில்துறை சங்கம் போட்டியாளர் நெறிமுறை ஆணையமான சிசிஐயை அணுகிப் புகாரளித்ததும், இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதில் கூறப்பட்டிருக்கிறது.
ஓரவேல் நிறுவனம், சிசிஐ விதித்த அபராதம் குறித்த தகவல்களை வெளியிட்டிருக்கிறது, ஆனால் அது மேற்கொள்ள வேண்டிய நடத்தை மாற்றங்களை செய்யும் அதிகாரம் சிசிஐக்கு உள்ளது என்பதை வெளியிடவில்லை, இது போட்டி எதிர்ப்பு வணிக நடைமுறைகளை முற்றிலும் சீர்குலைக்கக்கூடும், ஓரவேலின் இத்தகைய நடைமுறைகள் பிற போட்டியாளர்களின் வருமானத்தை கடுமையாக பாதிக்கக்கூடும் என்று எஃப்.எச்.ஆர்.ஏ.ஐ துணைத் தலைவர் குர்பாக்ஷ் சிங் கோஹ்லி கூறினார்.