எல்ஐசி முதலீடுகள் 10 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் சரிவு !
இன்னும் சில மாதங்களில் ஐபிஓ வெளிவர இருக்கும் நிலையில் எல்ஐசி நிறுவனம் பிற நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தது, அந்த முதலீட்டின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு கண்டிருப்பதாக ப்ரைம் இன்ஃபோபேஸ் நிறுவனம் கூறியிருக்கிறது
அதாவது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் எல்ஐசி நிறுவனம் செய்த முதலீடு 2009 ஆம் ஆண்டு ஜூன் காலாண்டில் 4.44 சதவீதமாக இருந்தது, இந்த முதலீடு கடந்த செப்டம்பர் காலாண்டில் 3.69 சதவீதமாக குறைந்திருக்கிறது, கடந்த ஜூன் மாத காலாண்டில் இது 3.74 சதவீதமாக குறைந்தது. பொதுத்துறை பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்து அதன் மூலம் 2021-2022 ஆம் நிதியாண்டில் ரூபாய் 1.72 லட்சம் கோடி நிதியை திரட்ட முடிவு செய்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாக கடன் இல்லாமல் அதிக சொத்து மதிப்புடன் இயங்கிவரும் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை பங்குச் சந்தை மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது, எல்ஐசி பங்கு வெளியீட்டின் மூலம் மட்டும் 90 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்திய வரலாற்றிலேயே இந்த நிதி திரட்டல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்
இந்த நிலையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களிலிருந்து எல்ஐசி நிறுவனம் தனது பங்குகளை விற்று வெளியேறுவது குறித்த செய்திகள் முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பங்குச் சந்தையில் எல்ஐசி பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் செய்திருக்கும் முதலீடு பல லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் நிலையில், இனி அந்த முதலீட்டை எப்போது பங்குச் சந்தையில் மீண்டும் முதலீடு செய்யும் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.