இங்கிலாந்தில் குடியேறுகிறாரா முகேஷ் அம்பானி?
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரும், இந்தியப் பணக்காரர்களில் முதலிடத்தை பிடித்திருப்பவருமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி, தானோ அல்லது தன் குடும்பத்தினரோ இடம் மாறும் திட்டம் எதுவும் இல்லை என்று அறிவித்துள்ளார், அண்மையில் முகேஷ் அம்பானி இங்கிலாந்தில் தனது இரண்டாவது வீட்டை கட்டிக் கொண்டிருக்கிறார் என்றும் 2022 ஏப்ரல் வாக்கில் அவர் அங்கு குடியேறிவிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் ஷையரில் 300 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட அரண்மனை போன்ற வீட்டுடன் கூடிய இடத்தை முகேஷ் அம்பானி இந்த ஆண்டு துவக்கத்தில் 192 கோடி ரூபாய்க்கு வாங்கினார். இந்த பங்களாவில் 49 படுக்கை அறைகள் உள்ளன. இதில் ஒரு சிறப்பு மருத்துவருடன் கூடிய தனி மருத்துவமனை வசதியும் பல்வேறு ஆடம்பர வசதிகளும் இடம்பெற்றுள்ளன, ஒருவேளை அவர் இந்த பங்களாவில் நிரந்தரமாகக் குடியேறலாம் என்றும் செய்தி ஊடகங்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது இதுகுறித்து முகேஷ் அம்பானி எந்த செய்தியையும் உறுதி செய்யவோ மறுக்கவோ இல்லை.
ஆனால், இப்போது முகேஷ் அம்பானியின் அதிகாரப்பூர்வ அலுவலக செய்திக் குறிப்பு வெளிநாட்டுக்குக் குடியேறும் திட்டம் ஏதுமில்லை என்று அறிவித்து பல்வேறு ஐயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.