பணமதிப்பிழப்பீட்டு நடவடிக்கை – 5 ஆண்டுகள் முடிந்து சாதித்தது என்ன?
2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி திடீரென்று தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். இது எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி அறிவிக்கப்பட்டது, இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். இது நிகழ்ந்து நேற்றோடு ஐந்து ஆண்டுகள் முடிந்து விட்டது.
கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக தான் இந்த திட்டத்தினை அரசு எடுத்தது என்று கூறப்பட்டது, ஆனால் கருப்பு பணம் எவ்வளவு சிக்கியது என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி நமது நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 17 லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய் என்று 2016 ஆம் ஆண்டு பணம் மதிப்பிழப்புக்கு நான்கு நாட்களுக்கு முன்பு சொல்லப்பட்டது, தற்போது அந்த மதிப்பானது 64 சதவீதம் உயர்ந்து 29.17 லட்சம் கோடி இருக்கிறது. இதன் மூலமாக டிஜிட்டல் பயன்பாடு கணிசமாக அதிகரித்து இருந்தாலும் இந்தியர்களின் கையில் ரொக்கப்பணம் தான் செல்வாக்குடன் இருக்கிறது என்பது தெரிய வருகிறது.
தீவிரவாதம் ஒழிக்கப்படும் என்று சொல்லப்பட்ட வாதமும் பொய்த்துப் போய் தொடர்ந்து ஊடுருவல்களும், தீவிரவாதத் தாக்குதல்களும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. 100க்கும் மேற்பட்டவர்கள் தெருவில் வரிசையில் நின்று இறந்து போனதைத் தவிர வேறெதுவும் மாற்றங்கள் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.