அதானியைக் கைவிட்ட அமெரிக்க வங்கி ! ஆஸ்திரேலிய சுரங்கத் திட்டத்தில் பின்னடைவு !
ஆஸ்திரேலியாவில் நிறுவப்படும் அதானி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கத்திற்கு இனி நிதி உதவி செய்யப் போவதில்லை என்று நியூயார்க் மெலான் கார்ப்பரேஷன் வங்கி தெரிவித்துள்ளது, இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவன அதிபர்களில் ஒருவரான கௌதம் அதானிக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து மாகாணத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
“நிலக்கரி சுரங்கத் திட்டத்தை அதானி கைவிட வேண்டும். அதுவரை நாங்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்போம்” என்று அங்கிருக்கும் பூர்வகுடி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சூழலில், இந்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் ‘நிலத்தோடு நிற்கிறோம்’ ‘கார் மைக்கேல் நோக்கி’ என்று அடுத்தடுத்த வலுவான போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இதனை அடுத்து கார்மைக்கல் நிலக்கரிச் சுரங்கத்திற்கு முதலீடு செய்ய முன்வந்த பல்வேறு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பின் வாங்கிக் கொண்டனர். அதில் ஒன்றுதான் பேங்க் ஆஃப் நியூயார்க் மெலான் கார்ப் வங்கி. அந்த வங்கி விடுத்துள்ள அறிக்கையில் “அதானி உடனான அனைத்து பரிவர்த்தனைகளில் இருந்தும் தாங்கள் விலகுவதாகவும், ஆஸ்திரேலியாவில் உள்ள அதானி நிறுவனத்துடன் இனிமேல் எந்தவிதமான பரிவர்த்தனைகளையும் நாங்கள் தொடரப் போவதில்லை” என்று கூறப்பட்டுள்ளது
அதானி நிறுவனம் தனது ஆஸ்திரேலியா சுரங்கத்தில் இருந்து முதல் ஏற்றுமதியை இந்த ஆண்டுக் கடைசியில் அனுப்ப முடிவு செய்தது. இந்த கார்மைக்கல் நிலக்கரி சுரங்கத்தின் மூலமாக வருடத்திற்கு 10 மில்லியன் டன் நிலக்கரியை வெட்டி எடுக்க முடியுமாம். வங்கி ஆஸ்திரேலியாவில் இருக்கும் அதானி சுரங்கத் திட்டத்தில் எந்த புதிய ஒப்பந்தத்திலும் ஆர்வம் காட்டவில்லை என்றும், அதில் நுழைய விரும்பவில்லை என்றும் கூறியுள்ளது.