சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வர்த்தகம் ₹ 84,328 கோடியாக அதிகரிப்பு !
நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 84,328 கோடியாக அதிகரித்துள்ளது என்று அதன் நிர்வாக இயக்குநர் தெரிவித்தார். கும்பகோணத்தை தலைமை அலுவலகமாக கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கி 2021-22 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு கணக்கு மற்றும் முதல் அரையாண்டிற்கான முடிவுகளை வங்கியின் நிர்வாக இயக்குனர் காமகோடி நேற்று வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் கூறும்போது,”நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் வங்கியின் மொத்த வியாபாரம் ரூ.84,328 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கியின் வைப்புத்தொகை ரூ.46,315 கோடியாகவும், கடன்கள் (அட்வான்ஸ்) ரூ.38,012 கோடியாகவும் உள்ளது. வங்கியின் அரையாண்டு மொத்த லாபம் ரூ.788 கோடியாகவும் அதிகரித்துள்ளது. மேலும் வங்கியின் நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் ரூ.3.55 கோடியாக உள்ளது.
நேரடி மற்றும் மறைமுக வரிகளை வசூலிக்க வங்கிக்கு நிதி அமைச்சகம் அங்கீகாரம் அளித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் சியுபி நெட் மற்றும் மொபைல் வங்கி சேவை மூலம் நேரடி மற்றும் மறைமுக வரிகளை செலுத்தும் வசதி கூடிய விரைவில் வழங்கப்பட உள்ளது” என்றும் தெரிவித்தார்.