பிரம்மாண்ட பொதுத்துறை நிறுவன மூடுவிழா விற்பனை! – திரு ப சிதம்பரம் அவர்களுடைய எழுத்துக்களிலிருந்து…
அம்பலப்படுத்தப்பட்டுள்ள பெரும்பொய் !
கடந்த ஏழு ஆண்டுகளாக, திரு. நரேந்திர மோடியும் அவரது அமைச்சர்களும் முந்தைய அரசாங்கங்களை (அதாவது காங்கிரஸ் மற்றும் முந்தைய அனைத்து அரசாங்கங்களையும், முரண்பாடாக அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கம் உட்பட) “கடந்த 70 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை புதிதாக எதையும் உருவாக்கவுமில்லை” என்று கடுமையாக கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இவை அனைத்தும், மே 2014-ல் தான் இந்தியா சுதந்திரம் பெற்றது போல் இருக்கிறது. ஆகஸ்ட் 23, 2021 அன்று, ‘பணமாக்க’ முன்மொழியப்பட்ட சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டார் நிதி அமைச்சர். இருப்பினும், அந்த சொத்துக்கள் எப்போது கட்டமைக்கப்பட்டன என்பதை வெளிப்படுத்த அவர் தவறிவிட்டார். இதற்கான பதில், பழிதூற்றப்படும் கடந்த 70 வருடங்களில் என்பது தான்.
பட்டியலில் உள்ள சொத்துக்கள்:
• 26,700 கிமீ சாலைகள்
• 28,698 சார்க்யூட் கிமீ ‘பவர் டிரான்ஸ்மிஷன்’ சொத்துக்கள்
• 6000mw நீர்மின் மற்றும் சூரியசக்தி (சோலார்) சொத்துக்கள்.
• 8154 கிமீ இயற்கை எரிவாயு குழாய்த்தொடர்
• 3930 கிமீ பெட்ரோலிய பொருட்கள் குழாய்த்தொடர்
• 210,00,000 மெட்ரிக் டன் கொள்ளக்கூடிய சேமிப்பு கிடங்கு சொத்துக்கள்
• 400 ரயில் நிலையங்கள், 90 பயணிகள் ரயில் இயக்கங்கள், 265 சரக்கு ரயில் கொட்டாரங்கள்
• கொங்கன் ரயில்வே மற்றும் பிரத்யேக சரக்கு வழித்தடம்
• 2,86,000 கிமீ ஃபைபர் மற்றும் 14,917 தொலைத்தொடர்பு கோபுரங்கள்
• 25 விமான நிலையங்கள் மற்றும் 9 முக்கிய துறைமுகங்களில் 31 திட்டங்கள் மற்றும்
• 2 தேசிய விளையாட்டு அரங்குகள்
தங்களது பேணா முனை கீறலினால், இந்தியாவின் பொதுத்துறை சொத்துக்களை ஒருமதிப்பும் இல்லாமல் செய்யப்போவதாக திரு.மோடியும் அவரது நிதி அமைச்சரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர். அரசாங்கம் தனது வசம் சொத்தின் “உரிமையாளர்” என்று ஒரு துண்டு காகிதத்தை வைத்துக்கொண்டு, ஆண்டுக்கு ₹ 1,50,000 கோடி “வாடகை” வசூலித்துக்கொள்ளலாம் என்று உற்சாகத்துடன் மதிப்பிட்டுள்ளனர். பெருமளவில் மதிப்பிழந்த சொத்து பரிமாற்ற காலத்தின் முடிவில் அரசாங்கத்திற்கு “திருப்பித் தரப்படும்” என்றும் அவர்கள் பெருமை பேசுகிறார்கள். இது தேசிய பணமாக்குதல் திட்டத்தின் (நேஷனல் மானடைஷேசன் பைப்லைன் – NMP) உச்சமாகும்!
குறிக்கோள்கள் மற்றும் அளவுகோல் இல்லாமை:
முதலீடு மற்றும் தனியார்மயமாக்கல் கொள்கை பல ஆண்டுகளாக உருவாகியுள்ளது, 1991 முதல் அனைத்து அரசாங்கங்களும் கொள்கையை மேலும் துல்லியமாக சீர்திருத்தியுள்ளன. தனியார்மயமாக்கள் குறிக்கோள்களில் வருவாய் என்பது ஒரு இலக்கு மட்டுமே. மற்ற நோக்கங்களாக மேம்பட்ட மூலதன முதலீடு, நவீன தொழில்நுட்பங்களை புகுத்துதல், பொருட்களுக்கான சந்தை விரிவாக்கம், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை இருக்கின்றன.
தனியார்மயமாக்கப்படும் பிரிவுகளை தேர்ந்தெடுப்பதற்கு சில அளவுகோல்களும் அமைக்கப்பட்டன.
அவற்றில்:
- உத்திகளுடன் செயல்படக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படாது – எ.கா., அணுசக்தி, பாதுகாப்புதுறை சார்ந்த உற்பத்தி, ரயில்வே, உத்திசார் துறைமுகங்கள்.
- நீண்டகாலமாக நஷ்டத்தை ஏற்படுத்தும் அலகுகள் தனியார் மயமாக்கலாம்.
- தனது தயாரிப்புகளுக்கு குறைந்தபட்ச சந்தைப் பங்கைக் கொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனத்தை தனியார் மயமாக்கலாம்.
- ஒரு பொதுத்துறை நிறுவனம் போட்டியை ஊக்குவிக்க முடியுமானால் அது தனியார் மயமாக்கப்படும்; அதுவே ஏகபோகத்திற்கு (மொனோபொலி) வழிவகுத்தால் அது தனியார் மயமாக்கப்படாது.
இந்த அளவுகோல்கள் தூக்கி எறியப்பட்டு, மாற்று அளவுகோல்கள் அறிவிக்கப்படவுமில்லை. வியக்கத்தக்க வகையில், ரயில்வே சிறப்பு உத்திக்கொண்ட துறையிலிருந்து நீக்கப்பட்டது. இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனி போன்ற சந்தைப் பொருளாதாரங்கள் ரயில்வே துறையை (அல்லது நாட்டின் ரயில்வே அமைப்பில் பெரும்பகுதியை) தக்கவைத்துக் கொண்டிருக்கும்போதிலும், இங்கு, தற்போது முக்கியமற்ற சொத்து என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஏகபோகங்களுக்கான பாதை
துறைமுகங்கள், விமான நிலையங்கள், சூரியசக்தி (சோலார்) மின்சாரம், தொலைத்தொடர்பு, இயற்கை எரிவாயு குழாய், பெட்ரோலிய குழாய் மற்றும் கிடங்கு போன்ற முக்கிய துறைகளில் ஏகபோகங்களுக்கு (அல்லது, இருமுனை போட்டிக்கு) தேசிய பணமாக்கல் திட்டம் (NMP) வழிவகுக்கும் என்ற உண்மையான கவலை உள்ளது. தொழில் மற்றும் சேவை துறைகளில் தனியார் அமைப்பு தலைமையிலான பொருளாதாரத்திற்கு ஒப்பீட்டளவில் இந்தியா ஒரு புதுவரவு. இத்தகைய பொருளாதாரங்கள், தவிர்க்க முடியாத ஏகபோக உரிமைகளை உருவாக்கும் ஓர் நிலையை எட்டும். இது சம்பந்தமாக அமெரிக்கா நமக்கு பல பாடங்களைக் கற்பிக்க முடியும். தற்போது, அமெரிக்க காங்கிரஸ் மற்றும் அரசாங்கம் கூகுள், பேஸ்புக் மற்றும் அமேசானின் ஏகபோக மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைக் கட்டுப்படுத்த சட்டங்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகின்றன. தென் கொரியா தங்கள் நாட்டின் ஏகபோக பெருங்குழும வணிகக்கழகங்களை பிளவுபடுத்தியுள்ளது. சீனா, ஒழுங்குபடுத்த முடியாத அளவுக்கு பெரிதாக மாறியுள்ள தனது சில தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக அதிரடி காட்டத் தொடங்கியுள்ளது. மறுபுறம், தேசிய பணமாக்கல் திட்டம் (NMP), நமது நாட்டை எதிர் திசையில் கொண்டு செல்வதற்கு உறுதியளிக்கிறது!
என் எம் பி-யின் கீழ் கொண்டு வரப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் தேர்வில், வரைகூறுகள் வெளிப்படையாக இல்லாததைத் தவிர, குறிக்கோள்கள் என்ன என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. வருடத்திற்கு ₹1,50,000 கோடி “வாடகை” வசூலிக்கும் நோக்கத்தைக் கருத்தில் எடுப்போம், தெரிவுசெய்யப்பட்ட சொத்துக்களால் “தற்போது” பெறப்படும் வருடாந்திர வருமானம் பற்றி எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. அரசாங்கத்தின் வருவாய் ஆதாயம் அல்லது இழப்பு ₹1,50,000 கோடிக்கும் தற்போதைய ஆண்டு வருவாய்க்கும் உள்ள வித்தியாசமாக இருக்கும். வேலைவாய்ப்புகள் மற்றும் இட ஒதுக்கீடு பற்றிய தெளிவும் இல்லை. பணமாக்கப்பட்ட நிறுவன அலகுகளில் தற்போதைய வேலைகளின் எண்ணிக்கை பராமரிக்கப்பட்டு, அதனை தொடர்ந்து பிறகு மேம்படுத்தப்படுமா?
ரகசிய திட்டமிடல்
இதற்குக் கொடுக்கப்படும் விலை மிக மோசமான எதிர்மறையானதாக இருக்கும். பணமாக்கப்பட்டவுடன், பொதுத்துறை நிறுவனம், சந்தையின் விலை-நிலைப்படுத்தியாக இருப்பதை நிறுத்திவிடும். ஒரு துறையில் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று தனியார் போட்டி நிறுவனங்கள் இருந்தால், அவர்களால் விலை நிர்ணயம் மற்றும் அவர்களுக்குள்ளான ஏகபோக வணிகக்கூட்டும் அமையும். போட்டிச் சந்தை என்று அழைக்கப்படும் சிமெண்ட் சந்தையில் கூட, மேற்கூறியது உண்மை என்று நாங்கள் கண்டறிந்துள்ளோம். வங்கித்துறையில் இது நடைபெற்றதை அறிந்து யுனைடெட் கிங்கிடம் அதிர்ந்தது. பல துறைகளில் விலை உயரும் என்பது எனது அச்சம்.
இறுதியாக, இந்த செயல்முறை திரு மோடியின் அரசாங்கம் செயல்படுத்தும் சதிகார முறையை பிரதிபலிக்கிறது. என்எம்பி குறித்து எந்த வரைவு அறிக்கையும் இல்லை, பங்குதாரர்கள்; குறிப்பாக ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் எந்த ஆலோசனையும் இல்லை. பாராளுமன்றத்தில் எந்த விவாதமும் இல்லை, ஒருபோதும் நடைபெறப்போவதும் இல்லை. கொள்கை ரகசியமாக உருவாக்கப்பட்டு, திடீரென அறிவிக்கப்பட்டது. இந்த கதையின் காரண நாயகரையும் அவரது கொள்கையையும் புகழ்வதற்கு ஊடகங்களையும், தனியார் துறையின் தலைவர்களையும் போதுமான அளவு அரசாங்கத்தால் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. பெரும் பேரம் நடைபெற்று மறைமுக விற்பனை நடைபெறப்போவதற்கும், ஏகபோகவாதிகளை வரவேற்பதற்கும் தயாராகுங்கள்!