3 விவசாய சட்டங்களை திரும்பப் பெற்றது மத்திய அரசு ! பரபரப்பான பிரதமர் உரை !
பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்கள் நீக்கப்படும் என்று அறிவித்தார். “அனைத்து விவசாய சங்கங்களுடன் கலந்து ஆலோசித்துத்தான் விவசாய சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த சட்டம் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டது. இதுகுறித்து புரிய வைக்க நாங்கள் பல முயற்சிகள் செய்தோம். ஆனால் அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. ஆகையால் வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த 3 மசோதாக்கள் திரும்பப் பெறப்படும். விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு தங்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார் பிரதமர்.
மேலும் பிரதமர் விவசாயிகள் தங்கள் வீடுகளுக்கும், வயல்களுக்கும் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். முக்கிய மாநில தேர்தல்களுக்கு முன்னதாக, விவசாயிகளின் போராட்டங்கள் ஒரு வருடத்தை நிறைவு செய்ய உள்ள நிலையில் அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சட்டங்களைப் பற்றி விவசாயிகளுக்கு கற்பிக்கவும், அதன் விவரங்களைத் தெரிவிக்கவும் தனது அரசு தன்னால் இயன்றதைச் செய்தது என்றும், அரசு அவர்களின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து பணியாற்றும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
இந்த அறிவிப்பை சம்யுக்த் கிசான் மோர்ச்சா, பாரதிய கிசான், பஞ்சாப்பின் அமரீந்தர் சிங் ஆகியோர் வரவேற்றுள்ளனர். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி , ” விவசாயிகளின் சத்யாகிரகத்துக்கு முன்னால் ஆணவம் தலை குனிந்தது” என்று கருத்து தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்த 3 விவசாய மசோதாக்களை தாக்கல் செய்தார். அதில், விவசாயிகள் வர்த்தக மேம்பாடு மற்றும் வசதிக்கான மசோதா, விளைபொருட்கள் விலை உத்தரவாதத்திற்கான பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் அதிகாரமளிக்கும் விவசாய சேவை மசோதா ஆகிய மூன்று மசோதாக்களும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்களிடையே இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. வரும் ஆண்டு பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.