பிஸ்கட் முதல் சோப்பு வரை தொடர்ந்து உயரும் விலைவாசி !
மூலப் பொருட்களின் விலையேற்றத்தால் இந்தியாவின் இரு பெரும் நுகர்வோர் நிறுவனங்களான இந்துஸ்தான் யூனிலீவர்ஸ் லிமிடெட், ஐடிசி லிமிடெட்டின் சோப்பு மற்றும் தனிநபர் பயன்பாட்டுப் பொருட்கள் ஆகியவை இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக விலையேற்றம் கண்டன. தனிநபர் பயன்படுத்தும் பொருட்களில் இந்துஸ்தான் யூனிலீவர் பொருட்கள் 4 முதல் 22 சதவீதம் வரையிலும், ஐடிசியின் பொருட்கள் 8 முதல் 10 சதவீதம் வரையிலும் விலையேற்றம் கண்டன. பிஸ்கட் மற்றும் இனிப்பு தயாரிக்கும் பார்லே நிறுவனமும் 8 முதல் 10 சதவீதம் வரை தனது பொருட்களை விலையேற்றத் திட்டமிட்டுள்ளது.
கச்சா எண்ணெய், பாமாயில், பனை சார்ந்த பொருட்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தும் இரசாயனங்கள் உட்பட பொருட்களின் விலை இந்த ஒரு வருடத்தில் மட்டும் மெட்ரிக் டன்னுக்கு 60 சதவீதம் உயர்ந்து 1,220 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. போக்குவரத்து மற்றும் கையாளுதல் போன்றவற்றின் கட்டணங்கள் கணிசமாக உயர்ந்ததும் இந்த விலையேற்றத்துக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.