IPO வுக்கான ஒப்புதல் பெற்ற “ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ்” நிறுவனம் !
தென் இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணியில் இருக்கும் ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் இதுவரை பல்வேறு ரியல் எஸ்டேட் திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. இன்னும் பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. இந்த நிறுவனம் பொது வெளியீட்டுக்கான (IPO) வரைவை செபியிடம் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றுள்ளது. இந்தப் பொது வெளியீட்டின் மூலம் 800 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஐபிஓ மூலம் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பங்குகள், மற்றும் 550 கோடிக்கான சலுகை விற்பனை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இது இருக்கும். இந்த ஐபிஓ மூலம் கிடைக்கும் நிகர வருமானத்தை கடன்களை திருப்பிச் செலுத்துதல் அல்லது கடனை முன்கூட்டியே செலுத்துதல் மற்றும் பொது நிறுவன நோக்கங்களுக்காக பயன்படுத்த நிறுவனம் உத்தேசித்துள்ளது.
இந்த நிறுவனம் இந்தியாவின் பெருநகரங்களான பெங்களூரு, சென்னை மற்றும் கொல்கொத்தா தவிர விசாகப்பட்டினம் மற்றும் கோயம்பத்தூரிலும் பல்வேறு ரியல் எஸ்டேட் திட்டங்களை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.