பங்குச் சந்தையின் கருப்பு தினத்தில் பலத்த அடி வாங்கிய நிறுவனங்கள் !
மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ 7,35,781 கோடி வரை சரிவடைந்தது, கடந்த வெள்ளிக்கிழமை பங்கு சந்தைக்கு ஒரு ‘கறுப்பு தினம்’ ஆகும். மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1688 புள்ளிகளை இழந்து 57,107ல் முடிவடைந்தது. இந்த வாரம் சென்செக்ஸ் மற்றும் நிப்டி 4 சதவீதம் குறைந்தது. பங்குகளின் மதிப்பானது அதிகபட்சம் 8 சதவீதம் வரை சரிந்தது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இதன் காரணமாக முன்னணி நிறுவனப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.
நிப்டி வங்கி, நிதிச் சேவைகள், உலோகம், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், நுகர்வோர் பொருட்கள், எண்ணெய், மற்றும் எரிவாயு குறியீடுகள் 3.5 முதல் 5 சதவீதம்வரை சரிந்தன, குறிப்பாக ஒரு பீப்பாய் எண்ணெய் 80 டாலருக்கும் கீழே சரிந்தது. சென்செக்ஸில் 4 பங்குகள் மட்டுமே லாபத்தை பெற்றன. டாக்டர் ரெட்டிஸ் 3.32 லாபத்தை பெற்று பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. நெஸ்லே, டிசிஎஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் ஓரளவு லாபத்தை பெற்றன.
அதேநேரத்தில் இண்டஸ் இன்ட் வங்கி (6.01), மாருதி நிறுவனம் (5.27), டாடா ஸ்டீல் (5.23) சதவீத வீழ்ச்சியை பதிவு செய்தன. தேசிய பங்குச் சந்தையில் பார்மா, ஹெல்த் கேர் பங்குகள் தவிர அனைத்து துறைகளும் வீழ்ச்சியை சந்தித்தன. தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரானா கண்டறியப்பட்டதும் சர்வதேச சந்தைகளில் மந்தமான நிலை காணப்பட்டது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது.