2021 – ஒரு பொருளாதாரப் பார்வை !
இந்த வருடத்தின் கடைசியில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் 2022 புத்தாண்டு பிறந்து விடும். 2021ல் பொருளாதாரரீதியாக நமக்கு பாதிப்பை ஏற்படுத்திய சிலவற்றை மட்டும் பார்ப்போம். சர்வதேச சந்தைகளில் ஆயுள் காப்பீட்டுக்கான கட்டணங்கள் உயர்ந்ததையடுத்து இந்தியாவிலும் கட்டணம் உயர்ந்தது. குரூப் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் விலையும் கணிசமாக ஏற்றம் கண்டதையடுத்து தனிநபர் இன்சூரஸிலும் விலையேற்றம் கண்டுள்ளது.
அதைப்போலவே எஸ்பிஐ கார்டுதாரர்கள் இஎம்ஐயில் பொருட்கள் வாங்கினால் 99 ரூபாயுடன் சேர்த்து அதற்கான பிராசசிங் கட்டணமும் செலுத்த வேண்டும். இந்த திட்டம் டிசம்பர் 1ந் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்தது. இந்த கட்டணங்கள், சில்லறை விற்பனை கடைகளில் இருந்து இணைய தள சேவைகள் வரை பொருந்தும். வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஏறிப்போய் கிடக்கிறது. சர்வதேச நிலவரங்களுக்கேற்ப மாதாமாதம் விலையேறுகிறது. டெல்லியில் மானியம் இல்லாத 14.2 கிலோ சிலிண்டரின் விலை 899.5 ரூபாயாக இருக்கிறது. வீட்டு உபயோகத்திற்கான 5 கிலோ சிலிண்டரின் விலை 502 ரூபாயாக உள்ளது. 19 கிலோ கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை 2000.5 ரூபாயாக இருக்கிறது.
அடுத்ததாக அனைவரும் பயன்படுத்தும் கைப்பேசி தொலைத்தொடர்பு துறையின் விலையேற்றம். ஏர்டெல், வோடபோனைத் தொடர்ந்து ஜியோவும் டிசம்பர் முதல் தனது கட்டணங்களை உயர்த்தியுள்ளது அனைவரையும் கலங்க வைத்துள்ளது. வங்கிப் பிரிவில் பஞ்சாப் நேஷனல் வங்கி, 10 இலட்சத்திற்கு கீழ் கணக்கு வைத்திருக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு 2.8 சதவீதமும், 10 இலட்சத்திற்கு மேல் வைத்திருக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு 2.85 சதவீத வட்டியும் டிசம்பர் முதல் தரப்போவதாக அறிவித்துள்ளது. இது வங்கி சேவைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக நுகர்வோர் துறையில், சாப்பாடு முதல் மின்சாதனம் வரை, ஒப்பனை சாதனங்கள் முதல் ஆடை அலங்கார பொருட்கள் விலைகளும் ஏறிப்போயுள்ளன. உதாரணத்திற்கு, அண்மையில் விலை ஏற்றம் கண்டிருக்கும் தக்காளியைச் சொல்லலாம். எல்லா விலைகளும் ஏறுகின்றன. அவற்றை வாங்கும் அளவுக்கு சம்பளம் மட்டும் ஏறாது போலும்.