இந்தியாவின் இரண்டு வகைப் பொருளாதாரம் !
இந்தியா பல ஆண்டுகளாக பொருளாதார இருமை மற்றும் ஏற்றத்தாழ்வுகளால் வகைப்படுத்தப் பட்டுள்ளது.
பணக்காரன், ஏழை, நகரம் , கிராமம், படித்தவர், படிக்காதவர் என்று இப்படியான அடிப்படை பிளவு பொருளாதார இருமை வாதத்தின் பல பரிமாணங்களின் விளைவு ஆகும். காலப்போக்கில் மாறிக் கொண்டே இருப்பதால், பொருளாதார இருமைவாதம் வெளிப்படையாக பல பரிமாணங்களை கொண்டுள்ளது.
வீட்டு உபயோகம் பற்றிய 2017-18ம் ஆண்டில் தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை.
ஆனால் கசிந்த தகவல்கள் அடிப்படையில், கிராமப்புற வறுமை கணிசமாக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களில் முதல் முறையாக வறுமை விகிதத்தில் ஒட்டுமொத்த அதிகரிப்பை சுட்டிக் காட்டியுள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் கடைசி ஆண்டுகளில் மெதுவான பொருளாதார வளர்ச்சி, மற்றும் 2016ன் பிற்பகுதியில் பணமதிப்பு நீக்கத்தின் இரட்டை அதிர்ச்சிகள் மற்றும் 2017-18ல் சரக்கு மற்றும் சேவை வரிக்கு வலிமிகுந்த மாற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டால் இது ஒன்றும் ஆச்சரியமானதல்ல.
அதன் பின்னர் கோவிட் தொற்றுநோய் வந்தது. 2020 மார்ச் பிற்பகுதியில் நாடு தழுவிய லாக்டவுன் வந்தது.
இந்த லாக்டவுன் காரணத்தால் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஜிடிபி 24 சதவீதம் சரிவதற்கும், முழு நிதியாண்டில் ஜிடிபி 7.3 சதவீதம் குறைவதற்கும் வழிவகுத்தது.
இது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வேலையின்மை 20 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது. 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்று இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஜூன் முதல் லாக்டவுன் பல துறைகளில் படிப்படியாக நீக்கப்பட்டதும் பெரிய, முறையான நிறுவனங்களில் உற்பத்தியை விரைவாக மீட்டெடுக்க அது உதவியது. எவ்வாறாயினும் வேலைகள் மற்றும் வருவாய் மீட்சி மிகவும் மெதுவாகவே இருந்தது.
எனவே, இந்தியாவில் பங்குச் சந்தைகள் அசாதாரணமான ஏற்றம் பெற்றன. அதேநேரத்தில் 2021ம் ஆண்டில் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வேலை வாய்ப்பு ஜனவரி 2020டன் ஒப்பிடுகையில் 2.5 சதவீதம் குறைவாக இருந்தது. இது வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர் பங்கேற்புக்கு மிகவும் மோசமான ஆண்டாகும்.
மேலும் சிஎம்ஐஇயின் தரவு மற்றும் பல்வேறு மைக்ரோ சர்வேக்கள், மீண்டும் பணியமர்த்தப்பட்டவர்களிடையே சராசரி வருவாய், கோவிட்டுக்கு முந்தைய காலத்தை விட கணிசமாக குறைந்திருந்ததைக் குறிக்கிறது.
வரையறைகள், நேரம் மற்றும் சூழல் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகள் காரணமாக இந்த மதிப்பீடுகளை ஒப்பாய்வு செய்வது கடினமாக இருக்கும்.
2017-18ல் தேசிய வறுமை விகிதம் சுமார் 23 சதவீதமாக இருந்திருந்தால்,2020-21ல் அது 30-35 சதவீதம் உயர்ந்திருக்கலாம். நகர்ப்புறத்தை விட கிராமப்புற வறுமை விகிதங்களை ஒருவர் எளிதாக யூகிக்கலாம்.
இவ்வாறு வருமானம் மற்றும் நுகர்வு ஆகியவற்றின் இந்த அடிப்படை பரிமாணங்களில் கோவிட், இந்தியாவில் பொருளாதார இருமைவாதத்தை கணிசமாக கூர்மைப் படுத்தியுள்ளது.
கணிசமாக அதிகரித்துள்ள பொருளாதார இருமைவாதம், நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு நமது பொருளாதார, மற்றும் சமூகப் பாதையில் எதிர்மறையான தாக்கங்களை செலுத்த வாய்ப்புள்ளது
இந்தப் பிரச்சினைக்கு எளிதான தீர்வுகள் இல்லை. ஆனால் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகள் தெளிவாக நிலைமையை சீர்செய்யும்.
பொருளாதாரத்தின் முறையான மற்றும் முறைசாரா பிரிவுகளில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதே தீர்வுக் கொள்கையின் மையக் கருத்து.
கிராமப்புற வேலை உறுதி திட்டங்களை வலுப்படுத்துதல், சிறந்த கொள்கைகள் மூலம் உள்நாட்டிலும், வெளிச்சந்தைகளுக்கு உழைப்பு மிகுந்த உற்பத்தியை ஊக்குவித்தல், பள்ளிகளில் கற்றல் விளைவுகளை மேம்படுத்துதல், கல்வி, சுகாதாரம், சாலைகள், வேறு சில உள்கட்டமைப்புகள் போன்ற பொருட்களுக்கான கூடுதல் செலவினங்களை மேற்கொள்ள தேசிய வரியை ஜிடிபி விகிதத்தில் உயர்த்துதல், மற்றும் அதிக தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கு வணிக சூழலை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல செயல்கள் பரந்த அளவில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான சிறந்த வழிகள்.