எல்.ஐ.சி – ஆரம்ப பொது வழங்கல் (IPO) பாலிசிதாரர்களுக்கு பயனளிக்குமா?
அரசுக்குச் சொந்தமான இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் ஐ.பி.ஓ விரைவில் சந்தைக்கு வரவிருக்கிறது. எல்.ஐ.சியின் ஐ.பி.ஓ மூலமாக அரசாங்கம் இந்த ஆண்டிற்கான முதலீட்டு இலக்குகளை அடைய விரும்புகிறது.
ஐ.பி.ஓ-வை ஜூலை மாதம் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அங்கீகரித்தது. எல்.ஐ.சி யின் மதிப்பைக் கணக்கிடுவதற்கு மில்லிமேன் அட்வைஸர்ஸ் நிறுவனம் நிதி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டது. தற்போது ஹெச்எஸ்பிசி, கோல்ட்மேன் சாக்ஸ், பேங்க் ஆஃப் அமெரிக்கா, சிட்டி க்ரூப் மற்றும் பீ என் பி பாரிபாஸ் உட்பட குறைந்தது 16 வணிக வங்கியாளர்கள் பொது வெளியீட்டை நிர்வகிக்க போட்டா போட்டி போடுகின்றனர். அரசு யாரை தேர்ந்தெடுக்கப் போகிறது என்பதை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் முதலீட்டு இலக்குகளை அடைய அரசாங்கம் கஷ்டப்படுகிறது. ஏர் இந்தியா மற்றும் பிபிசிஎல் பங்குகளிலிருந்து முதலீட்டு விலகலை அடைவது, கோவிட்-19 உட்பட பல்வேறு காரணங்களால் தாமதமானது. இந்த நிதியாண்டில் அது பயனளிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கம் இந்த நிதியாண்டில் ₹1.75 லட்சம் கோடி முதலீட்டை அடைவதை இலக்காக வைத்துள்ளது. எல்.ஐ.சி யின், ஐ.பி.ஓ வெற்றியடைந்தால் இந்த இலக்கை அடைய உதவும். ஐ.பி.ஓ வெளியாகும் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், எல்.ஐ.சியின் பட்டியலிடல் 2021-22 மூன்றாவது அல்லது நான்காவது காலாண்டில் சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்.ஐ.சி, ஐ.பி.ஓ மூலம் ₹ 1 லட்சம் கோடி வரை பெற முடியும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கே. சுப்பிரமணியன் மார்ச் மாதம் கூறியிருந்தார். பட்டியலை அனுமதிக்க 1956 இன் எல்.ஐ.சி சட்டம் திருத்தப்பட்டாலும், பங்குகளின் எண்ணிக்கை மற்றும் விலைப்பட்டியல் போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆயுள் காப்பீட்டு கழகச் சட்டம், 1956-ல் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் படி, எல்ஐசியின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ. 25,000 கோடியாகும், பங்கு ஒவ்வொன்றும் ரூ.10 முகமதிப்பில் 2,500 கோடி பங்குகளாகப் பிரிக்கப்படும்.
பாலிசிதாரர்களுக்கு என்ன பயன்?
எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு ஐ.பி.ஓ-ன் வெளியீட்டு அளவில் 10% வரை ஒதுக்கப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. சந்தை கட்டுப்பாட்டாளர் செபியின் விதிகளின்படி, இடஒதுக்கீடு மற்றும் ஊழியர்களுக்கான நிறுவன ஒதுக்கீடுகளின் தொகுப்பு, முன்மொழியப்பட்ட வெளியீட்டுத் தொகையில் 10% ஐ தாண்டக்கூடாது. ஒரு நிறுவனம் அதன் ஊழியர்களுக்குப் பங்குகளை அதிகபட்சமாக 10% தள்ளுபடியில் வழங்க முடியும். எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு வெளியீட்டு விலையில் அரசு தள்ளுபடி வழங்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐ.பி.ஓ தொடங்குவதற்கு முன்னதாக சில்லறை முதலீட்டாளர்களை ஈர்க்க அரசும் எல்.ஐ.சியும் இணைந்து பல திட்டங்களைக் கையாள எண்ணுகின்றன. அதில் ஒன்று அவர்களுக்கு IDBI வங்கி மூலம் டீமேட் கணக்குகளைத் தொடங்கச் செய்வது. இந்த டீமேட் கணக்கை மற்ற வங்கிகளிலும் தொடங்கலாம் ஆனால் அந்த வேலையை எளிதாக்குவது தான் நோக்கம் என்று ஒரு அதிகாரி கூறுகிறார். ஐ.பி.ஓ-விற்கு ஒரு பெரிய விளம்பர பிரச்சாரம் திட்டமிடப்பட்டுள்ளது என்கின்றன தகவல்கள்.