டெஸ்லா இந்தியாவிற்குள் நுழையும் தருணம் நெருங்குகிறது; 4 மாடல்களுக்கு ஒப்புதல்!
நான்கு மாடல்களைத் தயாரிக்க அல்லது இறக்குமதி செய்ய அமெரிக்க மின்சார வாகன நிறுவனமான டெஸ்லாவுக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. டெஸ்லா தனது வாகனங்கள் இந்தியாவின் சாலைகளுக்கு தகுதியானவை என்று சான்றிதழ் பெற்றுள்ளதாக, நாட்டின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெஸ்லா ரசிகர் மன்றம் ஒன்றிலிருந்து, முதன்மையாக மாடல் 3 மற்றும் மாடல் Y வகைகள் இந்தியாவிற்குள் நுழையலாம் என்று அனுமானிக்கப்பட்டுள்ளவது.
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் கடந்த மாதம் விடுத்த ட்வீட்-ல், “இந்தியாவின் இறக்குமதி வரிகள் உலகிலேயே மிகவும் அதிகமானவை. சுத்தமான எரிசக்தி வாகனங்களையும் பெட்ரோல் டீசல் வாகன இறக்குமதி போன்றே நடத்துகிறது, இது அதன் காலநிலை குறிக்கோள்களுடன் ஒத்துப்போகவில்லை. முதலில் இறக்குமதி செய்த வாகனங்ளின் சந்தை வரவேற்பை கணித்து அதன்பின்னர் உள்நாட்டு உற்பத்தி குறித்த சாத்தியங்களை எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
மின்சார கார்களின் இறக்குமதி வரியை தற்போதைய வரம்பான 60% முதல் 100% வரையில் இருப்பதை, 40% ஆகக் குறைக்குமாறு டெஸ்லா, போக்குவரத்து மற்றும் தொழில்துறை அமைச்சகங்களுக்கு முன்னதாகக் கடிதம் எழுதியது.
மின்சார வாகனங்களுக்கு இந்தியாவில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. அவை மொத்த வருடாந்திர கார் விற்பனையில் 1 % மட்டுமே. இந்திய நிபுணர்களின் பார்வையில் அவை இன்றும் விலை உயர்ந்தவையே. போதுமான சார்ஜிங் உள்கட்டமைப்பும் நம்மிடத்தில் இல்லை. இவை அனைத்தையும் கடந்து டெஸ்லா எப்படி வெற்றி பெறப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.