செப் 1 முதல், செபியின் புதிய ‘பீக் மார்ஜின்’ விதிமுறைகள்: யாருக்கு, என்ன பாதிப்புகள்?
பங்கு முதலீடு என்பது பலவருடங்களுக்கு தொடர்வது. பங்கு வர்த்தகம் என்பது பலவகையில் செய்யப்படுகிறது, அவற்றுள் சில:
- தின வர்த்தகம் (இன்ட்ரா டே) – அன்றே பங்குகளை வாங்கி அதே தினத்தில் விற்றுவிடுவது.
- ஊசல் வர்த்தகம் (ஸ்விங் ட்ரேட்) – பங்கு சந்தையின் ஏற்றத்திலும் இறக்கத்திலும், ஊகத்தின் அடிப்படையில் வர்த்தகம் மேற்கொள்வது.
- டெலிவரி வர்த்தகம் – முதலீட்டு முறையில் பங்குகளை பெற்றுக்கொள்வது.
- ஷார்ட் செல் – தன்னிடம் இல்லாத பங்கை விற்றுவிட்டு, வர்த்தகத்தை சமன் செய்ய பின்னாளில் அதே அளவு அதே நிறுவன பங்கை வாங்குவது.
- பி டி எஸ் டி (BTST) – இன்று வாங்கி மறுநாள் விற்பது.
- எஸ் டி பி டி (STBT) – இன்று விற்று மறுநாள் வாங்குவது.
- விளிம்பு வர்த்தகம் (மார்ஜின் டிரேடிங் ) – மார்ஜின் டிரேடிங் ஒரு அமர்வுக்காலத்தில் வாங்குவதும் விற்பதும் அடங்கும். இதில் ஈடுபடும் வர்த்தகர், வர்த்தகத்திற்கான ஆரம்ப மார்ஜினை செலுத்த வேண்டும். மார்ஜின் என்பது செபியால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட மொத்த வர்த்தக மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாகும்.
இத்தகைய வர்த்தகத்தை சீர்திருத்தும் நோக்கில் செபியின் நான்காவது மற்றும் இறுதிகட்ட பீக் மார்ஜின் விதிமுறையாக, இன்ட்ராடே நிலைகளை எடுக்க தேவையான மொத்த மார்ஜினில் 100 சதவிகிதத்தை பங்கு தரகர்கள் பெற்றுவிடவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. வர்த்தக நாள் ஒன்றுக்கு நான்கு முறை அனைத்து மார்ஜினையும் கணக்கில் எடுத்து, அதில் உள்ளத்திலேயே அதிகமானதை உச்ச மார்ஜினாகக் (பீக் மார்ஜின்) கொள்ளுமாறு, செபியின் விதிகள் கட்டாயப்படுத்தியுள்ளது.
செபியின் இந்தப் புதிய விதிகளை எளிமையாக சொல்வதென்றால்:
1) பங்குகளை வாங்கவும், விற்கவும் இனி வெளிப்படையான மார்ஜின் தேவைப்படும்.
எடுத்துக்காட்டு : நீங்கள் ₹ 1 லட்சம் மதிப்பிலான ரிலையன்ஸ் பங்குகளை வாங்க விரும்பினால், அதற்கான பீக் மார்ஜின் ₹ 20,000 மாக நிர்ணயிக்கப்பட்டால் உங்கள் கணக்கில் ₹20,000 கண்டிப்பாக இருக்க வேண்டும், மீத பணத்தை நீங்கள் 2 நாட்களுக்குள் செலுத்தியாக வேண்டும். உங்களிடம் இருக்கும் ₹ 1 லட்சம் மதிப்பிலான ரிலையன்ஸ் பங்குகளை விற்க விரும்பினாலும் உங்கள் கணக்கில் ₹ 20,000 கட்டாயம் இருக்க வேண்டும், இந்த விதிகள் மீறப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.
மேலே உள்ள கடைசி இரண்டு வரிகளை கவனமாகப் படிக்கவும், உங்கள் கையிருப்பில் உள்ள பங்குகளை விற்பதற்கும் வெளிப்படையான மார்ஜின் தேவைப்படும். அதாவது மதிப்பு காப்பின்மைக்கும் (VaR – வேல்யூ அட் ரிஸ்க்) + அதீத விளிம்பு இழப்பிற்கும் (ELM – எக்ஸ்ட்ரீம் லாஸ் மார்ஜின்) சேர்த்து நீங்கள் கூடுதல் பணத்தை வைத்திருக்க வேண்டும் அல்லது தேவையான வரையறுக்கப்பட்ட மார்ஜினுக்கு ஈடாக உங்களிடம் இருக்கும் மற்ற பங்குகளை உறுதியளிக்கலாம்.
2) நீங்கள் இன்று வாங்கிய பங்குகளை நாளையே விற்க முடியாது.
விளைவுகள் : BTST எனப்படும் “இன்று வாங்கி நாளை விற்கும்” நடைமுறை முடிவுக்கு வருகிறது.
எடுத்துக்காட்டாக, நீங்கள் திங்கட்கிழமை ரிலையன்ஸ் பங்குகளை வாங்குகிறீர்கள், பங்குகள் உங்களிடத்தில் முழுமையாக டெலிவரி ஆனதற்குப் பிறகுதான் பங்குகளை விற்பனை செய்ய முடியும், T2 நடைமுறை (பங்கை வாங்கிய நாள் + 2 நாட்கள்) முடிந்த பிறகே நீங்கள் விற்க முடியும், அதாவது புதன்கிழமை பங்குகளை டெலிவரி பெற்ற பின்னரே (உங்கள் டிபியில் பெற்ற பிறகு) நீங்கள் பங்குகளை விற்க முடியும்.
3) தங்களிடம் உள்ள பங்குகளை இன்று விற்று, விற்றதற்கான தொகையை இன்றே புதிய வர்த்தகத்திற்கு பயன்படுத்த முடியாது.
மறுநாள் மட்டுமே இதனைக்கொண்டு வர்த்தகம் மேற்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, இன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் ₹ 1,00,000 மதிப்புள்ள பங்குகளை விற்கிறீர்கள், அந்தப் பணத்தைக்கொண்டு அன்றே மற்ற நிறுவனங்களின் புதிய பங்குகளை வாங்க பயன்படுத்த முடியாது.
குறிப்பு : தற்போதைக்கு ஃப்யூச்சர் & ஆப்ஷன்ஸ் பரிவர்த்தனைகளில் அடுத்த அறிவிப்பு வரும்வரையில் எந்த மாற்றங்களும் இல்லை.