“நம்பமுடியாத உறுதிப்பாடு” – இந்தியாவின் சொத்து பணமாக்கல் திட்டம் !
இந்தியாவின் மிகப் பெரிய லட்சிய சொத்துப் பணமாக்கல் (NMP) இலக்குகளின் மூலம் பணம் திரட்டும் யதார்த்தவாதம் நமக்கு எந்தத் தீங்கும் செய்திடாது. ஆனால்?
1969 இல் வெளியான ‘பட்ச் கேஸிடி மற்றும் சன்டான்ஸ் கிட்’ திரைப்படத்தில், சன்டான்ஸ் கிட்டிடம் “சிறுவனே, எனக்கு பார்வை கிடைத்தது, உலகின் மற்ற அனைவரும் பை-ஃபோக்கல் (இரட்டை குவியக் கண்ணாடி) அணிந்துள்ளனர்”, என்று பட்ச் கேஸிடி கூறும் ஒரு வசனம் வரும். அரசாங்கத்தின் சொத்துக்களை தனியார் துறை நிறுவனங்களுக்கு முன்தொகை பெற்றுக்கொண்டு அல்லது அவ்வப்போது பணம் திரட்டும்பொருட்டு குத்தகைக்கு வழங்கும் திட்டம், ‘NMP’. இந்த தேசிய பணமாக்கல் திட்டத்தொடரின் லட்சியத்தை சிறப்பாக விவரிக்கும் பதம் “நம்பமுடியாத உறுதிப்பாடு”.
அரசுக்கு சொந்தமான சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகள், எரிவாயு பரிமாற்றக் குழாய்த்தொடர்கள், விளையாட்டரங்குகள், சுரங்கங்கள், வீடுகள் போன்ற சொத்துக்கள் பணமாக்கல் திட்டத்திற்கானதாக பார்க்கப்படுகிறது. நிதி ஆயோக்கின் சொத்துப் பணமாக்குதலுக்கான கையேடு சுட்டிக்காட்டுவது போல்: “இது பொது அதிகாரத்திற்கும் தனியாருக்கும் இடையிலான ஒரு சமநிலையான இடர் பகிர்வு கட்டமைப்பை செயல்படுத்துகிறது”. “2021-22 மற்றும் 2024-25 ஆண்டுகளுக்கு இடையில் தேசிய சொத்துப் பணமாக்கலின் கீழ் மொத்த சொத்துப் பணமாக்கல் ₹6 டிரில்லியன் மதிப்புடையது என்று நிதி ஆயோக் மதிப்பிட்டுள்ளது; இந்த 15% மதிப்பிலான சொத்துக்கள் (₹ 88,000 கோடி பணமதிப்புடையவை) மார்ச் 2022 இறுதிக்குள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது அமெரிக்க பொருளாதார வல்லுனர் சார்லஸ் மான்ஸ்கி குறிப்பிடும் “நம்பமுடியாத உறுதிப்பாடு” வழக்கு போல் தெரிகிறது. ‘நம்பமுடியாத உறுதிப்பாட்டின் கவர்ச்சி’ என்ற தலைப்பில் அவர் எழுதிய ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில், “கொள்கை விளைவுகளின் சரியான கணிப்புகள் வழக்கமானவை, நிச்சயமற்ற வெளிப்பாடுகள் அரிதானவை, கணிப்புகள் மற்றும் மதிப்பீடுகள் பெரும்பாலும் பலவீனமானவை, ஆதரிக்கப்படாத அனுமானங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட தரவுகளில் நிலைபெற்றுள்ளவை. ஆகவே நமக்குக் காட்டப்படும் உறுதிப்பாடு என்பது நம்பகமானது அல்ல.” என்கிறார்.
சொத்துப் பணமாக்கல் விஷயத்தில் வெளிப்படுத்தப்பட்ட உறுதிப்பாடு ஏன் நம்பமுடியாதது?
செயல்பாட்டு குத்தகைகள் மூலம் சொத்துக்களை பணமாக்கும் யோசனை தனியார்மயமாக்கலை விட மிகவும் சிக்கலானது, இதில், அரசு ஒரு தனது வசம் இயங்கும் ஒரு வணிகத்தை தனியாருக்கு விற்றுவிட்டு அதிலிருந்து வெளியேறி எந்த ஈடுபாடும் இல்லாது விட்டுவிடுவது. ஆயினும்கூட, இந்திய அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் பற்றிய பதிவு (இது மட்டும் இல்லாது) படுமோசமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஒரு பெரிய முதலீட்டு விலகல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பின்னர் தவறவிடப்படுகிறது. இதற்கு மாற்றாக, பொதுத் துறை பெருநிறுவனங்கள் மற்ற பொதுத்துறை நிறுவனங்களை வாங்க உந்தித் தள்ளப்படுகின்றன, பிறகு அதுவே முதலீட்டு விலக்கமாகக் காட்டப்படுகிறது.
ஏர் இந்தியாவின் தனியார் மயமாக்கல் செயல்முறை சில ஆண்டுகளாகவே தொடர்ந்து நடந்து வருகிறது, இதை போன்று பொதுத்துறை வங்கிகளுக்குமான பேச்சுகளும் நடைபெறுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பிப்ரவரி 2020 பட்ஜெட் உரையில் பேசிய போது தெரிவித்த “எல்ஐசி ஆஃப் இந்தியாவின் ஐபிஓ”, இன்றும் பேச்சளவிலேயே தொடர்கிறது. இதற்கிடையில், பங்குச் சந்தையின் மதிப்பு உயர்வானது, அதீத உயர்வாக மாறி இருக்கிறது.
நேரடியான விற்பனைத் திட்டங்களே இவ்வளவு காலம் எடுக்கும் போது அல்லது எதுவுமே நடந்தேறாத போது, அரசாங்கம் குத்தகைக்கு விட்டு சொத்துக்களை பணமாக்குதல் திட்டங்களின் மூலம் டிரில்லியன் கணக்கில் சம்பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? என்ற கேள்வி தவிர்க்க முடியாதது.
இந்திய ரயில்வே 150 ரயில்களை இயக்க தனியார் நிறுவனங்களை ஈர்க்க முயற்சிக்கும் ஒரு சமீபத்திய நடவடிக்கையை எடுத்துக் கொள்வோம். ரயில்வே துறையில் அரசின் தலையீடு உறுதியாகத் தொடரும் என்று தனியார் ஆபரேட்டர்கள் அஞ்சியதால் ஒரு கட்டத்தில் திட்டம் தோல்வியுற்றது. 2018 மார்ச்சில் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்தது இங்கே நினைவு கூரத்தக்கது.
“நீதிமன்றங்களின் பெரும்பகுதி வழக்குகளில் அரசாங்கம் ஒரு தரப்பாக இருக்கிறது”, மற்ற தரப்பை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் அதிகாரிகள் தங்கள் சொந்தப் பணத்தை செலவுசெய்வதில்லை, இதில் அரசாங்கம் ஒரு மகிழ்ச்சியான தரப்பாக உள்ளது. வழக்காடுவதற்கான முடிவுகள் ஒப்பீட்டளவில் கீழ் மட்ட நிர்வாகத்தில் எடுக்கப்படுகின்றன, அரசு தொடர்ந்து தோற்றாலும் கூட உயர் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்கிறது.
இன்றைய சூழலில், பெருவணிக குழுமங்களில் பல நிதி சிக்கலில் உள்ளன, இதனால் பணமாக்கப்படும் சொத்துக்கள் வெகு சிலரது கைகளில் சென்று சேரும் என்ற அச்சமும் நிலவுகிறது. இந்தியாவில் நிறைய தனியார் மூலதனமானது “களங்கப்படுத்தப்பட்டது” என்று வர்ணிக்கிறார் பொருளாதார வல்லுநர் “அரவிந்த் சுப்ரமணியன்”, இது போன்ற விமர்சனங்கள் அரசுக்கு விஷயங்களை எளிதாக்காது.
தனிநபர் நுகர்வு என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், அரசாங்கம் உள்கட்டமைப்பை உருவாக்க பணத்தை செலவழித்து இந்தியாவின் பொருளாதாரத்தை மீண்டும் முன்னேற்ற வேண்டும். மக்களுக்கு அதிக வரி விதிக்காமல் அல்லது அதிக நிதிப் பற்றாக்குறையை சந்திக்காமல் தேவையான பணத்தை ஈட்டுவதற்கான ஒரே வழி, அதன் குறிப்பிட்ட சொத்துக்களை பயன்பாட்டிற்கு வைப்பது தான். தேசிய சொத்துப் பணமாக்கலுக்குப் பின்னே இருக்கும் தர்க்கத்திற்கு எதிராக நாம் வாதிட முடியாது.
ஆயினும்கூட, தேசிய சொத்துப் பணமாக்கலில் அரசு செய்ய வேண்டிய பல விஷயங்கள் உள்ளது. அரசாங்க சொத்துக்கள் பணமாக்கப்படும் துறைகளுக்கு சுதந்திரமாக இயங்கும் கட்டுப்பாட்டாளர்கள் தேவை. நீதித்துறையின் திறன் மேம்படுத்தப்பட வேண்டும். அரசாங்கம் மகிழ்வோடு வழக்காடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
விஜய் கெல்கர் மற்றும் அஜய் ஷா “சர்வீஸ் ஆஃப் ரிபப்ளிக்”கில் குறிப்பிடுவதைப் போல “பொதுக் கொள்கையில் பாதுகாப்பான வழிமுறை என்பது சிறிய நகர்வுகளை மேற்கொள்வதன் மூலமும், அனுபவங்களில் இருந்து கருத்துக்களைப் பெறுவதன் மூலமும், ஆதாரப்பூர்வ கோட்பாடுகளின் வகையில் கொள்கைகளை மேம்படுத்துவதன் மூலமும் வளர்வதாகும்”, நிச்சயமாக, இது ஒரே இரவில் நடக்கப் போவதில்லை. ஒரு பெரிய அதிகார அமைப்பில் குறிப்பிடத்தக்க, நிலையான மாற்றம் என்பது நிகழ்வதற்கு சில காலம் பிடிக்கும்.
இறுதியாக, மைக்கேல் பிளாஸ்ட்லாண்ட் “தி ஹிடன் ஹாஃப்”பில் கூறுவதைப் போல, “கண்ணுக்குத் தெரியாத சக்திகள் எல்லாவற்றையும் பாதிக்கும்”, இது கொள்கைகளை உருவாக்கும் வணிகத்தின் மோசமாகப் பாதுகாக்கப்பட்ட இரகசியம், அந்த புதிய முன்முயற்சி நம் உலகத்தை எவ்வாறு சிறப்பாக மாற்றும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே (நம் நாட்டில் விஷயங்கள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்), நடைமுறையில் அது அடுத்த புதன்கிழமைக்குள் தோல்வியடையும், அல்லது வலிந்து உந்தப்பட்டும், ஆர்ப்பாட்டம் செய்யப்பட்ட பிறகும் ஒரு வருடத்தில் கைவிடப்படும். “லட்சியங்களோடு இருப்பது நல்லது, ஆனால் அதே வேளை யதார்த்தவாதம் பெரியளவில் தீங்கு செய்யாது என்பதையும் உணர வேண்டும். இந்தியாவில் பொதுக் கொள்கை என்பது, அளவாக விற்பனை செய்து நிறைவாக அடைவதை விட, அதிகமாக விற்கப்பட்டு, குறைவாக அடையப்படும் ஒரு வழக்கமாக மாறிவிட்டது.
நன்றி : விவேக் கௌல்