“கிரெடிட் கார்டு” பயன்படுத்துபவரா நீங்கள்? இதைக் கட்டாயம் படியுங்கள் !
“கிரெடிட் கார்டு” பயன்பாடு என்பது இப்போது நடுத்தரக் குடும்ப உறுப்பினர்களின் தவிர்க்க முடியாத பழக்கமாக மாறி இருக்கிறது, கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்களில் பலர் அதை முறையாகப் பயன்படுத்துவது எப்படி என்று தெரியாமல் மிகப்பெரிய கடன் சுமைகளில் சிக்கித் தவிக்கிறார்கள், பலர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் செய்திகளை எல்லாம் படிக்கிறோம், கிரெடிட் கார்டுகள் பொருளாதார நெருக்கடியில் நம்மைத் தள்ளுவதற்கு முன்பாக அதன் அடிப்படை விஷயங்களைப் பற்றிய ஒரு முழுமையான புரிதல் நமக்கு வேண்டும் என்கிறார் பொருளாதார நிபுணர் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன்.
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படையான குறிப்புகள் :
1) பில்லிங் தேதி (Billing Date) : ஒவ்வொரு மாதமும் உங்கள் பரிவர்த்தனைகளைக் குறித்த பில்லிங் செய்யப்படும் தேதி. இது பொதுவாக ஒரு குறிப்பிட்ட மாதத்திற்கான பில்லிங் சுழற்சியின் (Billing Cycle) கடைசி நாள். பில்லிங் தேதிக்குப் பிறகு அட்டையில் நடத்தப்படும் எந்தவொரு பரிவர்த்தனையும் உங்கள் அடுத்த பில்லிங்கில் தான் பிரதிபலிக்கும்.
2) பணம் செலுத்தவேண்டிய தேதி (Due Date) : பணம் செலுத்தவேண்டிய தேதி என்பது பொதுவாக பில்லிங் தேதி அல்லது பில்லிங் சுழற்சி முடிந்த பிறகு 21-25 நாட்கள் ஆகும். பில்லிங் தேதி மற்றும் கட்டணம் செலுத்தவேண்டிய தேதிக்கு இடையிலான காலம் வட்டி இல்லாத கடன் காலம் அல்லது கிரெடிட் கார்டு வழங்குநர் வழங்கும் சலுகை காலம் ஆகும்.
3) குறைந்தபட்ச நிலுவைக் கட்டணம் (Minimum Due Amount): உங்கள் கணக்கை பயன்படுத்தும் நிலையில் (Active Status) வைத்திருக்க ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்த வேண்டிய மிகச் சிறிய தொகையாகும். பொதுவாக, செலுத்தப்படாத மொத்த நிலுவைத்தொகையில் 5% ஆக குறைந்தபட்ச தொகை கணக்கிடப்படுகிறது. குறைந்தபட்ச நிலுவைத் தொகை ஒரு நிலையான தொகை அல்ல, இது ஒவ்வொரு மாதமும் மாறுபடும், கார்டைப் பயன்படுத்தி நீங்கள் செய்த பரிவர்த்தனைகளைப் பொறுத்து இந்தத் தொகை மாறுபடும்.
4) மொத்த நிலுவைத் தொகை : உங்கள் கிரெடிட் கார்டில் நீங்கள் பயன்படுத்திய செலுத்தப்படாத தொகையைக் குறிக்கிறது. இதில் கொள்முதல், இருப்பு பரிமாற்றங்கள் (Balance Transfers), ரொக்க முன்பணம் (Advance Cash), வட்டி கட்டணங்கள் (Interest) மற்றும் கட்டணங்கள் (Various Fees) குறிப்பிடப்பட்டிருக்கும். உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மொத்த இருப்பிலிருந்து நீங்கள் செலவழித்த தொகை மற்றும் தற்போதைய நிலையில் செலுத்தப்படாத கட்டணங்களின் கூட்டுத்தொகை என்றும் கணக்கிடலாம்.
நீங்கள் குறைந்த பட்சக் கட்டணத்தை (Minimum Due Amount) மட்டுமே செலுத்தினால் 24 சதவிகிதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது, பெரிய தொகைக்குப் பொருட்கள் வாங்கியபின் மாற்றப்படும் மாதாந்திரத் தவணை (EMI) முறைக்கு 63 சதவிகித வட்டி வசூலிக்கப்படுகிறது.
பில்லிங் தேதியில் இருந்து, குறிப்பிடப்பட்டிருக்கும் கட்டணம் செலுத்த வேண்டிய தேதியன்றோ, தேதிக்கு முன்பாகவோ மொத்த நிலுவைத் தொகையை (Total Outstanding) நீங்கள் செலுத்தி விட்டால், எந்த ஒரு கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டிய தேவையில்லை என்பதால், கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்ட் பயன்படுத்தும் போது அத்தகைய வழிமுறையைப் பின்பற்றிப் பயனடைவதே மிகச்சிறந்த வழி என்கிறார் பொருளாதார நிபுணர் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன்.