எலான் மஸ்க்கின் “ஸ்டார் லிங்க்”கில் இருந்து சஞ்சய் பார்கவா விலகல் !
இந்தியத் தொலைத் தொடர்புத்துறை மற்றும் கட்டுப்பாட்டாளர், நாட்டில் செயற்கைக் கோள் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்கான உரிமம் அல்லது அங்கீகாரம் இல்லாமல் முன்பதிவு செய்ததற்காக எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்தைக் கண்டித்ததின் பின்னணியில் அந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவை கவனித்து வரும் சஞ்சய் பார்கவா திடீர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முடிவு காரணமாக ஸ்டார்லிங்க் தனது வரவிருக்கும் பிராட்பேண்ட் ஸ்பேஸ் சேவைகளை முன்பதிவு செய்த 7,000 இந்தியர்களிடம் வைப்புத்தொகையாக சேகரித்த $99 (தோராயமாக ரூ7400) திரும்பப் அளிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் இருக்கும் தங்கள் கணக்குகளில் உள்நுழைய வேண்டும் என்று சுட்டிக்காட்டியது, கணக்கில் வேண்டுகோளை ரத்து செய்து பணத்தைத் திரும்பக் கோர வேண்டும், அது உடனடியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
“தனிப்பட்ட காரணங்களுக்காக ஸ்டார்லிங்க் இந்தியா வாரியத்தின் நாட்டு இயக்குநர் மற்றும் தலைவர் பதவியில் இருந்து விலகிவிட்டேன். எனது கடைசி வேலை நாள் டிசம்பர் 31, 2021. எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. “என்று பார்கவா கூறினார். ஸ்டார்லிங்கின் இந்தியத் தலைவராக அக்டோபர் 1 ந் தேதிதான் பதவியேற்றார். அவர் முன்பு எலான் மஸ்க்குடன் இணைந்து பணிபுரிந்தார்.