2022-23-ம் நிதியாண்டின் செலவினங்கள் – ரூ.11.6 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்..!!
2022-23-ம் நிதியாண்டின் செலவினங்களை சமாளிப்பதற்காக, மத்திய அரசு ரூ.11.6 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலதன செலவினம் அதிகரிப்பு:
வரும் நிதியாண்டில், மூலதன செலவினத்தை 35.4% அதிகரித்து, ரூ.7.5 லட்சம் கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.9% உயர்த்துவதற்கு மத்திய அரசு நேற்று வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.
மானியங்கள் குறையும்:
வரும் நிதியாண்டில், உணவு, உரம் மற்றும் பெட்ரோலிய பொருட்களுக்கு மத்திய அரசு தரும் மானியம் நடப்பு நிதியாண்டில் 39% குறைந்து, ரூ.4.33.108 கோடியாக இருக்கும் என்றும், 2022-23-ம் நிதியாண்டில் இந்த மானியம் மேலும் 27% குறைந்து ரூ.3.17.866 கோடியாக இருக்கும் எனவும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதிப் பற்றாக்குறை உயரும்:
நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 6.8% இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இது 6.9% உயரும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செலவினங்களை சமாளிக்க கடன்:
நடப்பு நிதியாண்டில் 2022-23-ம் நிதியாண்டின் செலவினங்களை சமாளிப்பதற்காக, மத்திய அரசு ரூ.11.6 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டியுள்ளதாகவும், சந்தையிலிருந்து இந்த கடன் திரட்டி கொள்ளப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் பட்ஜெட் மதிப்பீடான ரூ.9.7 லட்சம் கோடியை விடவும் இது சுமார் ரூ. 2 லட்சம் கோடி அதிகம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.