எரிவாயு இணைப்பு – மத்திய அரசு தகவல்..!!
பிரதம மந்திரியின் உஜ்வாலா (PMUY)திட்டத்தின்கீழ், 5 அல்லது 14.2 கிலோ எடையுடைய எரிவாயு இணைப்புகளை தேர்வு செய்ய மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ராமேஷ்வர் தெலி தெரிவித்துள்ளார்.
2016-ல் PMUY திட்டம் முதற்கட்டம் தொடக்கம்:
நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்காக டெபாசிட் இல்லாத 8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை அளிப்பதற்காக கடந்த 2016-ம் ஆண்டு மே 1-ம் தேதியன்று பிரதமரின் உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்டு, 2019-ம் ஆண்டு செப்டம்பரில் அதன் இலக்கு எட்டப்பட்டது.
1 கோடி பயனாளர்களுக்காக 2-ம் கட்டம் தொடக்கம்:
1 கோடி இலவச எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதற்காக 2021 ஆகஸ்ட் 10-ம் தேதி, PMUY திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடங்கப்பட்டு, அப்போது, இலவச உருளை மற்றும் அடுப்பு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இந்த நிலையில், ஏற்கனவே உள்ள நடைமுறைகளின்கீழ், கூடுதலாக 60 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குதற்காக PMUY திட்டத்தை 2022 ஜனவரியில் மத்திய அரசு நீட்டித்தது.
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்:
நடப்பு ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி, PMUY திட்டப் பயனாளிகளுக்கு 8.1 லட்சம் 5 கிலோ இணைப்புகளை விடுத்துள்ளது என்றும், மேலும், எண்ணெய் நிறுவனங்கள் பயனாளிகளுக்கு 14.2 கிலோ அல்லது 5 கிலோ எரிவாயு சிலிண்டர்களை தேர்வு செய்யும் வாய்ப்பை அளித்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
14.2 கிலோ சிலிண்டர்களை பயன்படுத்தி வந்த 7.69 லட்சம் பயனாளிகள் 5 கிலோ எரிவாயு சிலிண்டருக்கு மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனவரி 2022 1-ம் தேதி நிலவரப்படி, 1.08 கோடி வாடிக்கையாளர்கள் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை விட்டு கொடுத்துள்ளதாகவும் மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ராமேஷ்வர் தெலி தெரிவித்துள்ளார்.