தலைமறைவான தொழிலதிபர்கள்.. ரூ.18,000 கோடி திரும்பின..!!
தலைமறைவாக உள்ள 3 தொழிலதிபர்களிடமிருந்து 18 ஆயிரம் கோடி ரூபாயை திரும்பப் பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர் நிதிமோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விவகாரத்தில் 3 பேரும் தலைமறைவாக உள்ளனர்.
இந்த நிலையில் சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது, தலைமறைவாகவுள்ள விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோரிடமிருந்து வங்கிகள் ரூ.18,000 கோடியை திரும்பப் பெற்றுள்ளதாக மத்திய அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்தார்.
பணமோசடி தடுப்புச் சட்டம் 2002-ன் கீழ் வழக்குகள் தொடங்கப்பட்ட பின்னர், 4,700 வழக்குகளை அமலாக்க இயக்குனரகம் (ED) விசாரித்து வருவதாகவும், சட்டம் இயற்றப்பட்டதில் இருந்து 313 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் நீதிபதி ஏஎம் கான்வில்கர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் துஷார் மேத்தா கூறினார்.