கச்சா எண்ணை விலை உயர்ந்தாலும் Don’t Worry.. GDP 7.8% அதிகரிக்கும்..!!
கச்சா எண்ணெய் விலை அதிகமானாலும் பணவீக்கம் அதிகரிக்காது என கிரிசில் கடன்தர மதிப்பீட்டு நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கிரிசில்(Crisil) கடன்தர மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் பணவீக்கம் அதிகரிக்காது என்றும், 2022-23-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி(GDP) 7.8 சதவீதமாக வளரும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த இலக்கை அடைய உள்கட்டமைப்பு திட்டங்களில் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்றும், தனியார் முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும் எனவும் கிரிசில் கூறியுள்ளது.
இந்தியாவில் பணவீக்கம் கவலை தரும் விஷயமான இருந்தாலும், உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய்யின் விலை பேரலுக்கு 90 டாலர் சராசரியாக இருந்தாலும், பணவீக்கம் குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும், இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்துக்கு மேல் செல்லாமல் 5.8 சதவீதமாகவே இருக்கும் எனவும் கிரிசில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், நடப்பு நிதியாண்டில், நடப்பு கணக்குப் பற்றாக்குறை 2.2 சதவீதம் உயரும் வாய்ப்பு உள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை பேரலுக்கு 10 டாலர் அளவுக்கு அதிகமானால், இந்திய பொருளாதார வளர்ச்சியில் 40 புள்ளிகள் அளவுக்கு பற்றாக்குறை ஏற்படும் என கிரிசில் கடன்தர மதிப்பீடு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.