குறையுது Purse வீக்கம்.. ஏறுது பணவீக்கம்..!!
2022-ம் ஆண்டு பிப்ரவரி மாத பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதத்துக்கான மொத்த விற்பனை விலைக்கான குறியீட்டு எண்களை தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அதில், பிப்ரவரி மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 13.11 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் தொடர்ந்து 11-வது மாதமாக 10 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 2022 ஜனவரியில் 12.96 சதவீதம் இருந்த பணவீக்கம் பிப்ரவரியில் உயர்ந்து 13. 11 சதவீதமாக இருக்கிறது.
கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் மொத்தவிலை பணவீக்கம் 14.27 சதவீதமாக இருந்த நிலையில், அது 13.56 சதவீதமாக திருத்தப்பட்டது. 2021 பிப்ரவரியில், 4.83 சதவீதமாக இருந்த பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது, 2022 பிப்ரவரி மாதத்தில் 13.11 சதவீதமாக காணப்பட்டது.
பல்வேறு காரணிகளால் உணவு பொருட்கள், தாதுப்பொருட்கள் விலை உயர்வு, சமையல் எண்ணெய், ரசாயனம், ரசாயன பொருட்கள், எரிவாயு விலை, உலோகங்கள் உள்ளிட்டவற்றின் விலை உயர்வு காரணமாக நடப்பு ஆண்டு பிப்ரவரியில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.